Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு

மே 23, 2022 05:48

புதுடெல்லி: தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் பாராட்டு தெரிவித்தார். தாய்லாந்தின் பாங்காங் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியா அணியை வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்திய அணியினர் வரலாற்றுச் சாதனை படைத்தனர். 73 ஆண்டு கால வரலாற்றில் இந்திய அணி அந்தப்போட்டியில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதையடுத்து சாதனை படைத்த இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை இந்திய பாட்மிண்டன் வீரர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதேபோல் உபேர் பாட்மிண்டன் கோப்பையை வென்ற இந்தியமகளிர் பாட்மிண்டன் வீராங்கனை களும் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்திய வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும்போது, “நீங்கள் செய்துள்ளது சிறிய சாதனை அல்ல. மிகப்பெரிய சாதனையாகும். ஒட்டுமொத்த அணிக்கும் தேசத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களால் முடியும் என்ற மனப்பான்மை இன்று நாட்டில் புதிய பலமாக மாறியுள்ளது. பாட்மிண்டன் வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் அரசு வழங்கும். இதற்கு நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். விளையாட்டு வீரர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும்.

இதற்கு முன்பு மக்கள் இந்த பாட்மிண்டன் போட்டிகளை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. ஆனால் தாமஸ் கோப்பை வெற்றிக்கு பிறகு பாட்மிண்டன் விளையாட்டை நாடு கவனித்து வருகிறது’’ என்றார். இந்திய பாட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த், ‘‘இந்திய வீரர்களையும், விளையாட்டையும் பிரதமர் மோடி நன்றாக கவனித்து வருகிறார். அவரது எண்ணங்கள் வீரர்களுடன் இருக்கின்றன. அவரு டனான சந்திப்பு மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

பிரதமர் மோடி கேட்டதைத் தொடர்ந்து அவருக்கு தங்களதுஊரின் பிரபலமான `பால் மிட்டாய்’ இனிப்பை பாட்மிண்டன் வீரர் லக்ஷயா சென் வழங்கினார். இதுகுறித்து லக்ஷயா சென் கூறும்போது, “கடந்த வாரம் எங்களிடம் போனில் பிரதமர் மோடி பேசி வாழ்த்து தெரிவித்தார். அப்போது எங்களது ஊரான அல்மோராவின் பிரபலமான இனிப்பான `பால் மிட்டாய்` குறித்து பிரதமர் மோடிகேட்டறிந்தார். தற்போது பிரத மரைச் சந்தித்தபோது அந்த இனிப்பை நான் அவருக்கு வழங் கினேன்.

அல்மோராவில் `பால் மிட்டாய்’ பிரபலம் என்பதை பிரதமர் மோடி அறிந்துகொண்டு அதை வாங்கி வருமாறு கூறினார். என்னுடைய தாத்தா, தந்தை ஆகியோர் பாட்மிண்டன் வீரர்கள் என்பதையும் பிரதமர் அறிந்திருந்தார். இந்த சின்ன சின்ன விஷயங்கள் முக்கியமானவை. அவ்வளவு பெரிய மனிதர் இந்த சிறிய விஷயங்களை நினைவுபடுத்திப் பேசியது மிகவும் மகிழ்வாக இருந்தது” என்றார்.

தலைப்புச்செய்திகள்