Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குதுப்மினார் வழிபாட்டுத் தலமல்ல: தொல்லியல் துறை

மே 25, 2022 05:05

புதுடில்லி, :'டில்லியில் உள்ள குதுப்மினார் வழிபாட்டுத் தலமல்ல; நினைவு சின்னம் தான்' என, நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.டில்லியின் அடையாளங்களுள் ஒன்றாக உள்ள குதுப்மினாரை, முஸ்லிம் மன்னர் குத்புதின் அய்பக் கட்டினார்.

இந்நிலையில், 'இது, 27 ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்களை இடித்து கட்டப்பட்டது' என, சில ஹிந்து அமைப்புகள் கூறி வருகின்றன.இந்நிலையில், டில்லி நீதிமன்றத்தில், சங்கர் ஜெயின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'குதுப்மினார் கட்டப்படுவதற்கு முன், அங்கு 27
கோவில்கள் இருந்தன. அந்த வளாகத்தின் கோவிலில் இருந்த சிலைகள், இப்போதும் அங்கு உள்ளன. எனவே, குதுப்மினார் வளாகத்தில் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும்' என,
கூறியிருந்தார்.இதற்கிடையே, மத்திய கலாசாரத் துறை செயலர் கோவிந்த் மோகன், சமீபத்தில் குதுப்மினார் வளாகத்தை பார்வையிட்டார். இதையடுத்து, உண்மை நிலையை கண்டறிய, அங்கு ஆய்வு மேற்கொள்ளும்படி தொல்லியல் துறைக்கு மத்திய கலாசார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதை கலாசாரத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
இந்நிலையில், டில்லி நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில் கூறியிருப்பதாவது:குதுப்மினார் ஒரு நினைவு சின்னம் தான்; வழிபாட்டுத் தலமல்ல. இது, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு முன், எந்த சமூகத்தின் வழிபாட்டுத் தலமாகவும் இல்லை.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின், அந்த இடத்தில் மாற்றம் செய்வது சட்டத்துக்கு விரோதமானது. கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு முன் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலை தொடர வேண்டும். அதை பாதுகாத்து, பராமரிக்கும் பொறுப்பு, தொல்லியல் துறைக்கு உள்ளது.
அதனால், குதுப்மினார் வளாகத்தில் வழிபாடு நடத்த உரிமை கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்