Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி திடீர் இடமாற்றம்

மே 26, 2022 04:22

சென்னை: கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். இதன்பிறகு சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக விஜயராணி பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு பதிலாக புதிய ஆட்சியராக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணை செயலாளராக இருந்த அமிர்த ஜோதியை நியமித்து, தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். அங்கு பட்டா, சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற வருவாய்த் துறையின் சேவைகளைப் பெற வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இ-சேவை மையத்திற்குச் சென்று, அம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் எவ்வளவு நாட்களில் தீர்க்கப்படுகிறது போன்ற விவரங்கள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், வட்டாட்சியர் அலுவலக வருகைப் பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை ஆய்வு முதல்வர், வட்டாட்சியரிடம், வருகை தந்துள்ள அலுவலர்கள், பணியாளர்கள் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சேவைகள் பெற வந்திருந்த பொதுமக்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்கள் பெற வந்துள்ள சேவைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆய்வு செய்த முதலமைச்சர் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் அலைக்கழிக்கக் கூடாது என்றும், அவர்களுக்கு உரிய சேவைகளை விரைவாக வழங்கிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வட்டாசியர் மற்றும் இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதில் குறைபாடுகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் விஜயராணியை இட மாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்