Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2 உலோக சிலைகள் பறிமுதல்: ரூ.2 கோடிக்கு பேரம் பேசியவர் கைது

மே 27, 2022 12:02

கும்பகோணம்: மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழமையான 2 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த சிலைகளை ரூ.2 கோடிக்கு பேரம் பேசியவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பழமைவாய்ந்த 2 உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சின்னதுரை மற்றும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்று, அவற்றை பதுக்கி வைத்திருந்த நபரை சந்தித்து, சிலைகளை வாங்குவதுபோல பேரம் பேசினர். அப்போது, அந்த நபர் வைத்திருந்த 2 உலோக சிலைகளுக்கு ரூ.2 கோடி விலை பேசப்பட்டது. அதன்பிறகு, அந்த நபர் சிலைகளை எடுத்து வந்து காண்பித்தவுடன், அவரை போலீஸார் பிடித்து, அவரிடமிருந்த 700 ஆண்டுகள் பழமையான, புத்தமத கடவுள் அவலோகிதரரின் மனைவி தாராதேவி, 300 ஆண்டுகள் விநாயகர் என 2 உலோக சிலைகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர், அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (32) என்பதும், வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். சிலைகள் இன்று கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

தலைப்புச்செய்திகள்