Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிற்பட்டோர் ஆணைய கூட்டத்தில் உள் இடஒதுக்கீடு விவாதிக்க தடை: உயர் நீதிமன்றம்

மே 27, 2022 12:03

மதுரை: பிற்பட்டோர் நல ஆணையக் கூட்டத்தில் உள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கவோ, முடிவெடுக்கவோ கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை சீர்மரபினர் நலச்சங்கத் தலைவர் எம்.ஜெபமணி, தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்டச் செயலர் பிரேசில் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மிகவும் பிற்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில், அரசியலைமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டத்தில் மிகவும் பிற்பட்ட பிரிவினருக்கான 20 சதவீதஇடஒதுக்கீடு அமலில் இருக்கும்போது, அதில் திருத்தம் செய்யாமல் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்கியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி அரசாணையை ரத்துசெய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைமீறும் வகையில் தமிழக பிற்பட்டோர்நல ஆணையக் கூட்டம் மே 31-ல்நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகதீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளது. அவ்வாறு உள் ஒதுக்கீட்டுக்குஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினாலோ, அதற்கு ஆதரவாக தாக்கல்செய்யப்படும் மக்கள் தொகை விவரங்கள் மற்றும் புள்ளி விவரங்களில் குளறுபடிகள் இருந்தாலோ மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் உள்ள பிற சாதியினருக்குப் பாதிப்பு ஏற்படும்.

எனவே, மே 31 கூட்டம் தொடர்பாக ஆணைய உறுப்பினர்களுக்கு தமிழக பிற்பட்டோர் ஆணையத் தலைவர் அனுப்பியுள்ள நோட்டீஸை ரத்து செய்து பிற்பட்டோர் ஆணையம் மிகவும் பிற்பட்டோர் பிரிவில் உள்ளசாதியினருக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மே 31-ல் பிற்பட்டோர் ஆணையக் கூட்டம் நடைபெறலாம். ஆனால், அந்தகூட்டத்தில் உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை மற்றும் முடிவுகள் எடுக்ககூடாது. மனுவுக்கு மத்திய, மாநில பிற்பட்டோர் நல ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
 

தலைப்புச்செய்திகள்