Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிதின் கட்கரி தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா: அமைச்சர் குற்றச்சாட்டு

மே 27, 2022 06:18

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் காணொலியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் அவமதித்ததாக தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நேற்று (மே 26) சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தபோது, ரூ.31,530 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் விழா மேடையில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அப்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அனைவரும் எழுந்து நின்றனர்.
இந்த நிகழ்வின்போது காணொலியில் பங்கேற்ற நிதின் கட்கரி எழுந்து நிற்காமல் அவமதித்துள்ளதாக தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: கடந்த 2018ம் ஆண்டு ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்தை நிதின் கட்கரி புறக்கணித்தார். தற்போது அமைச்சர் எழுந்து நிற்காதது யதார்த்தமாக நடந்ததாகத் தெரியவில்லை. இதன் மூலம் தமிழக மக்களை மத்திய அமைச்சர் அவமதித்துள்ளார்.

தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஏன் எழுந்து நிற்கவில்லை என விளக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதனை பதிவிட்டிருந்த நிலையில், தமிழில் பதிவிட்டதை தற்போது நீக்கியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்