Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கனவு நகரம் விரைவில் உருவாகும் : கவர்னர்

மே 29, 2022 11:52

புதுச்சேரி : ஆரோவில்லில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமில்லை என புதுச்சேரி கவர்னரும், ஆரோவில் நிர்வாகக் குழு உறுப்பினருமான தமிழிசை கூறினார். சர்வதேச நகரமான ஆரோவில்லில், 2500க்கும் மேற்பட்ட வெளிநாடு, உள்ளூர் வாசிகள் வசித்து வருகின்றனர். இங்கு அன்னையின் கனவு திட்டமான கிரவுன் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.இதற்காக மரங்கள் வெட்டப்பட்டதால், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதில், பசுமையை அழிக்காமல் திட்டத்தை மேற்கொள்ளலாம் என தீர்ப்பு வந்தது.
இந்த திட்டம் துவங்கிய நாளில் இருந்து ஆரோவில்லில் இரு குழுவினராக செயல்பட்டு வருகின்றனர். ஆரோவில் கமிட்டி உறுப்பினர் தேர்வு செய்வதில், இரு தரப்பினருக்கும் பிரச்னை இருந்து வருகிறது.இது போன்ற சூழ்நிலையில், ஆரோவில் வாசிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் புதுச்சேரி கவர்னரும், ஆரோவில் நிர்வாகக் குழு உறுப்பினருமான தமிழிசை பங்கேற்று கலந்துரையாடினார்.ஆரோவில் பவுண்டேஷன் செயலர் ஜெயந்தி ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதன் பிறகு கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது;
அன்னையின் கனவு முழுமை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நிர்வாகக் குழு செயல்பட்டு வருகிறது. 50 ஆயிரம் பேர் வாழ வேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்த நகரில், 50 ஆண்டுகள் கடந்தும், அன்னையின் திட்டம் நிறைவேறவில்லை.அன்னையின் கனவை நிறைவேற்ற ஆரோவில் நிர்வாகக்குழு பணிகளை விரைவுபடுத்தி வருகிறது. இயற்கையை அழிக்க வேண்டும் என்றோ, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றோ எந்த நோக்கமும் கிடையாது.
அன்னையின் கனவு நகரம் வெகு விரைவில் உருவாக்கப்படும்.சில இடங்களில் போதைப்பொருள் நடமாட்டம் போன்ற சில சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களை கட்டுப்படுத்தி வருகிறோம்  என்று அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்