Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை-ராமேசுவரம் ரெயில் சேவை தொடக்கம்

மே 30, 2022 01:27

மதுரை: மதுரை-ராமேசுவரம் இடையே காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும், முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இவை பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மதுரை-ராமேசுவரம் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரெயில் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் மதுரை-ராமேசுவரம் இடையே பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் மதுரை-ராமேசுவரம் இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (30-ந் தேதி) மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.35 மணிக்கு மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரெயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரெயில் காலை 10:15 மணிக்கு ராமேசுவரத்துக்கு போய் சேர்ந்தது. மறு மார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், இரவு 9.55 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரெயில் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜ கம்பீரம், மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், வாலாந்தரவை, உச்சிப்புளி, மண்டபம் கேம்ப், மண்டபம், பாம்பன் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. மதுரை-ராமேசுவரம் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுவது, பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரெயிலில் பயணிகள் மிகவும் உற்சாகமாக பயணம் செய்தனர்.
 

தலைப்புச்செய்திகள்