Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இனி சனிக்கிழமைகளில் புதுச்சேரியிலும் பள்ளிகள் இயங்காது

மே 30, 2022 01:51

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் 1 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது என்றும் அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுவை காமராஜர் கல்வித் துறை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கல்வியாண்டு நாட்காட்டியை வெளியிட்டார். இந்த நாட்காட்டியில் பள்ளிகள் செயல்படும் நாள், விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியது: ''புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு கடந்த 5ம்தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 1ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

முதல்வர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி 2022-23ம் கல்வியாண்டுக்கு புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் 1 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு 23ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும். 11ம் வகுப்பு தொடங்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். பள்ளிகள் திறக்கும் நாள் முதல் மாணவர் பஸ் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

அன்றைய தினமே பாடபுத்தகங்கள், சீருடை வழங்கப்படும். புதிதாக 70 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க உள்ளோம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்துள்ளோம். மொழி ஆசிரியர்களை நியமித்துள்ளோம். பள்ளி திறக்கும் முன்பே ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளோம். நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்காது. பள்ளிகள் திறப்பு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். புதுவையில் முழுமையாக சிபிஎஸ்இ திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசனை உள்ளது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் சென்றால் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்ற தேவை இருக்காது" என்று குறிப்பிட்டார். பேட்டியின்போது கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு, இணை இயக்குநர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்