Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாய்கள் கண்காட்சியில் சாம்பியன் பட்டம் வென்றது ஜெயின்ட் பெர்னார்டு

மே 31, 2022 11:05

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோடை விழாவில் கால்நடைத்துறை சார்பில் நடந்த நாய் கண்காட்சியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கொடைக்கானல் ஹரிஷ் வளர்த்த ஜெயின்ட் பெர்னார்டு வென்றது.இங்கு மே 24 ல் மலர் கண்காட்சி, கோடை விழா துவங்கியது. நேற்று கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி நடந்தது. ஜெயின்ட் பெர்னார்டு, பொமேரியன், ஜெர்மன் ஷெப்பர்டு, அமெரிக்கன்

புள்டெரியர், சிட்ஜூ, பக், ராட்வில்லர், டாபர்மேன், கோல்டன் ரெட்ரீவர், பிக் புல், கிரேட் டேன், டெரியர் என 54 வகை நாய்கள் பங்கேற்றன. நான்கு பிரிவுகளில் நடந்த இப்போட்டியில் நாய்களின் செயல்பாடு, கட்டளைகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆராயப்பட்டன.ஒட்டுமொத்த சாம்பியனாக ஹரிஷ் வளர்த்த ஜெயின்ட் பெர்னார்டு தட்டி சென்றது. ஜூன் பாக் வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்ட், அனுராதா வேதமூர்த்திக்கு சொந்தமான கோல்டன் ரெட்ரீவர், அருண் பிரகாஷ் வளர்த்த கிரேட் டென் முதல் பரிசு பெற்றன. மற்ற இதர வகைகளுக்கு ஆறுதல் பரிசுகள் அளிக்கப்பட்டன.கால்நடை முன்னாள் உதவி இயக்குனர் அப்துல் ஹக்கீம், உதவி இயக்குனர்கள் பிரபு, சுரேஷ், டாக்டர்கள் அருண், சங்கரவிநாயகம், தினேஷ் பாபு பங்கேற்றனர். மழை பெய்த போதும் கண்காட்சியை ஏராளமான பயணிகள் கண்டு ரசித்தனர்.

ஹரிஷ், கொடைக்கானல்: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற வளர்ப்பு நாயால் பெருமையாக உள்ளது. பிறந்து 8 மாதங்கள் ஆன நாய்க்கு சத்தான உணவு, மருத்துவ பரிசோதனை என அக்கறை காட்டி வளர்ப்பதால் மட்டுமே, போட்டியில் ஜெயிண்ட் பெர்னார்டு சிறப்பாக பங்கு எடுத்தது. அருண் பிரகாஷ், கொடைக்கானல்: குழந்தை போல பாவித்து நாயை வளர்த்து வருகிறேன். தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படுகிறது. தற்போது முதல் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 12 ஆண்டுகளாக நாய் கண்காட்சியில் கலந்து கொண்டு ஒவ்வொரு முறையும் சிறப்பு பரிசு பெறுகிறது.

தலைப்புச்செய்திகள்