Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் மருத்துவ நூல்கள்

மே 31, 2022 11:22

சென்னை : சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் மருத்துவ நுால்களை வெளியிட, மருத்துவ நிபுணர்கள் முன் வர வேண்டும், என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை, கோபாலபுரத்தில், டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மைய தலைவரும், தலைமை நீரிழிவு டாக்டருமான வி.மோகன் எழுதிய, 'பேண்டிங், போஸ் அண்டு பியாண்டு' மற்றும் 'எதிலும் சிறப்பு' ஆகிய இரண்டு நுால் அறிமுக விழா நேற்று நடந்தது.நுால்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் டாக்டர். சுதா சேஷையன் ஆகியோர் வெளியிட்டனர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
உலகளவில், தற்போது சவாலான சூழலை எதிர்கொண்டு வருகிறோம். நாளுக்கு நாள் புதிது புதிதாக தொற்று நோய்கள் பற்றிய தகவல்கள் வெளியாகின்றன.இது, ஒருவித அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 17க்கு பின், கொரோனாவால் இதுவரை ஒரு இறப்பும் ஏற்படவில்லை. தற்போது, மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தில், 70.94 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
இதில், 25.42 லட்சம் பேருக்கு ரத்த அழுத்தமும், 19 லட்சம் பேருக்கு நீரிழிவும், 14.42 லட்சம் பேருக்கு இரண்டும் கண்டறியப்பட்டுள்ளது.இன்சுலினால், நீரிழிவு நோய் தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களின் இறப்பு தடுக்கப்படுகிறது.நோய்த் தொற்று, அதை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகள், பரிந்துரைகளை, பொதுமக்கள் பின்பற்றி நடக்க வேண்டும்.மருத்துவ துறை நிபுணர்கள், தாங்கள் மேற்கொள்ளும் ஆய்வில் கண்டறியும் தகவல்கள் குறித்து, சாதாரண மக்களும் அறியும் வகையில், புத்தகங்களை வெளியிட முன்வர வேண்டும் என்று அவர் பேசினார்.

பின், துணை வேந்தர் சுதா சேஷையன் பேசியதாவது: எதிலும் சிறப்பு' நுாலில், மற்ற மனிதர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற அனுபவங்களை அவர் தொகுத்துள்ளார். நுாலில், தந்தையிடம் இருந்து தான் கற்றது; பள்ளி அனுபவங்கள் ஆகியவற்றை சமகால கதைகளுடன் ஒப்பிட்டுள்ளார்.அந்த முயற்சியை, இந்த நுாலில் டாக்டர் மோகன் கையாண்டுள்ளார். எந்தவொரு செயலிலும் கவனம் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு, இந்நுால் சாட்சி. வருங்கால தலைமுறை, பெரியவர்களின் மதிப்பை தவறவிடக்கூடாது என்று அவர்பேசினார்.

தலைப்புச்செய்திகள்