Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜக மீண்டும் வெற்றி பெறுவது நடக்காது: மம்தா பானர்ஜி

ஜுன் 01, 2022 11:48

மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவது நடக்காது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஏனெனில், பாஜகவின் வெறுப்பு, வன்முறை நிறைந்த அரசியலை நாடு வரவேற்காது என்று அவர் தனது நிலைப்பாட்டுக்கு விளக்கம் கூறியுள்ளார்.

மோடி அரசின் 8 ஆண்டு நிறைவை பாஜக கொண்டாடி வருகிறது. இதனையொட்டி பிரமர் மோடி பேசுகையில், "2014க்கு முன்னர் ஊழல், பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள், குடும்ப ஆட்சி, தீவிரவாத அமைப்புகள் ஆகியன நாடு முழுவதும் பரவிக் கிடந்தன. நாட்டில் பிராந்திய ரீதியான பாகுபாடுகளும் அதிகமாக இருந்தன. ஆனால், தேசம் அந்த மோசமான சூழலிருந்து வெளியேறிவிட்டது. இந்தியா இன்று உலக அரங்கில் சக்தி வாய்ந்த நாடாக உருவாகியுள்ளது" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "நான் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூற விரும்புகிறேன். 2024 மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக வீட்டுக்குச் சென்றே ஆக வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்குவர வாய்ப்பில்லை. 2024ல் பாஜகவின் வெறுப்பு, வன்முறை அரசியல் வரவேற்கப்படாது. புருலியா மண் எனக்கு மக்களுக்காக போராடும் சக்தியைக் கொடுத்துள்ளது. மக்கள் நலனைப் பாதுகாப்பதில் எனக்கு யார் மீதும் பயமில்லை. மக்களுக்காக என் முழு சக்தியையும் ஒருங்கிணைத்து போராடுவேன். போலியான வாக்குறுதிகளை கொடுத்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக அரசால் சாமான்ய மக்களின் வாழ்க்கை சிதைந்துள்ளது. மக்கள் விரோத திட்டங்கள் ஏழை மக்களை வாட்டுகிறது. மத்திய அரசு கலப்படம் நிறைந்தது. பணமதிப்பு நீக்கம் போன்ற மிகப்பெரிய ஊழல் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளனர்.

சிபிஐ, அமலாக்கப் பிரிவுகள் வேண்டாதவர்கள் மீது ஏவப்படும் அமைப்புகளாக உள்ளன. மோடி அரசு ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை கைது செய்கிறது. மகாராஷ்டிர அமைச்சரை கைது செய்கிறது. ஹேமந்த் சோரன் வீட்டில் ரெய்டு நடக்கிறது. மேற்கு வங்கத்தில் யாரோ ஒருவர் நிலக்கரி திருடன் எனக் கூறப்படுகிறார். ஏன் பாஜக அமைச்சர்கள் யாரும் இதில் கைது செய்யப்படாவில்லை. ஊழலுக்கு எதிரான பாஜக அரசு அவர்களையும் தானே கைது செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்