Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் தடைபடாது என கவர்னர் கவர்னர் உறுதி

ஜுன் 01, 2022 12:17

புதுச்சேரி: ''மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் நிர்வாக குறைபாடு அல்லது நிறுவனத்தோடு செய்த ஒப்பந்தம் காரணமாக தாமதமாகுமே தவிர, தடைபடாது'' என கவர்னர் பேசினார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் காணொலி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சி, புதுச்சேரி அரசு சார்பில் கம்பன் கலையரங்கில் நடந்தது.நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:பெண்கள் முன்னேறினால் வீடு முன்னேறும், நாடு முன்னேறும் என்பதால் இலவச எரிவாயு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் குடும்பத் தலைவி பெயரில் பதிவு செய்யப்படுகிறது.பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முத்ரா வங்கி கடன் திட்டங்களில் குறிப்பிட்ட சதவீதம் பெண்களுக்கும், அட்டவணை இனத்தவர், பழங்குடியினருக்கு வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.இதனால், இந்த திட்டங்கள் பரவலாக எல்லா பிரிவினருக்கும் சென்றடைந்துள்ளது.

திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேர வேண்டும்.நிர்வாகக் குறைபாடு அல்லது நிறுவனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக சில பயனாளிகளுக்கு கிடைப்பது தாமதமாகலாமே தவிர தடைபடாது.புதுச்சேரி எல்லா வகையிலும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் 'பெஸ்ட் புதுச்சேரி' என்ற தாரக மந்திரத்தைக் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமை செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில், 'பெஸ்ட் புதுச்சேரி' உடன் 'பாஸ்ட் புதுச்சேரி' ஆக இருக்க வேண்டும் என கூறியுள்ளேன்.பிரதமர் மோடி பொறுப்பேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த எட்டு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் மிகவும் சவாலான காலம். கொரோனா பெருந்தொற்றை சந்தித்தோம்.
அண்மையில், சுவிட்சர்லாந்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள், 'அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, கொரோனாவை கட்டுப்படுத்த மிக சிரமப்படும் என நினைத்திருந்தோம். ஆனால், சரியான நேரத்தில் சரியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசி கொடுத்து இந்திய மக்களை மட்டுமன்றி, பல நாட்டு மக்களை காப்பாற்றிய இந்திய பிரதமரின் முயற்சி பாராட்டுக்கு உரியது' என்றனர்.

அவர்கள் அதனை, 'இந்திய மாடல்' என்றனர்.கொரோனா காலத்தில் வளர்ந்த நாடுகள் கூட பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்தித்து மக்கள் பசியால் வாடிய நிலையில், இந்தியாவில், மக்கள் பசியால் வாடவில்லை.காரணம், இந்திய அரசின் இலவச அரிசி திட்டம் தான் என உலகப் பொருளாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.புதுச்சேரி மீது மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டியானாலும், கைவினைஞர்களுக்கான திட்டம் என்றாலும் புதுச்சேரியில் தான் நடத்த வேண்டும் என பிரதமர் குறிப்பிடுகிறார்.பிரதமர் மோடி, புதுச்சேரிக்கு பல நல்ல திட்டங்களை வழங்க இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வந்த போதும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். எது எப்படி இருந்தாலும் புதுச்சேரி பல புதுமைகளைக் காண இருக்கிறது.காரைக்கால் ஒதுக்கப்படுகிறது, கவனிக்கப் படவில்லை என சிலர் கூறி வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் காரைக்காலுக்கு சென்று தலைமைச் செயலருடன் சேர்ந்து கூட்டங்கள் நடத்தி அங்குள்ள திட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டோம்.காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனைக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்ற ஜிப்மர் மருத்துவ நிர்வாக குழுவினருடன் கூட்டம் நடத்தினோம்.
எந்த வகையிலும் எந்த பகுதியும் உதாசீனம் அடையாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலக அரங்கில் கொரோனாவுக்குப் பிறகு பொருளாதாரத்தை மீட்டு எடுத்த சில நாடுகளில் இந்தியா மிகச் சிறந்த இடத்தைப் பெறுகிறது என்றால், அதற்கு பிரதமரின் நிர்வாகத் திறமையும், கூட்டாகப் பணியாற்றிய அத்தனை மாநில அரசுகளும்தான் காரணம் என்று கவர்னர் பேசினார்.
 

தலைப்புச்செய்திகள்