Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காசி, மதுரா மசூதி விவகாரத்தில் நீதிமன்றங்கள் முடிவு எடுக்கும்: ஜே.பி. நட்டா

ஜுன் 01, 2022 02:39

புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயில்-கியான்வாபி மசூதி விவகாரம், மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரங்களில் நீதிமன்றங்கள் முடிவெடுக்கும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 8 ஆண்டு கால ஆட்சி நிறைவையொட்டி டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராம ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காசி, மதுரா விவகாரங்களை பொறுத்தவரை பாஜக சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாது. இந்த விவகாரங்களில் நீதிமன்றங்களே முடிவெடுக்கும். நீதிமன்ற உத்தரவு, அரசமைப்பு சாசனத்தை பாஜக உறுதியுடன் பின்பற்றும். எங்களை பொறுத்தவரை கலாச்சார வளர்ச்சியை ஊக்குவிக்கிறோம். வலுவான இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து அழைத்து செல்வோம். யாரையும் புறக்கணிக்க மாட்டோம்.

ஒரே இந்தியா, வலுவான இந்தியா என்பதே பாஜகவின் தாரக மந்திரம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சரிசமமான பங்கு கிடைக்கும். உத்தராகண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதை வரவேற்கிறோம். அனைத்து தரப்பினரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இதுதான் எங்களது அடிப்படைக் கொள்கை. அதன் அடிப்படையில் பாஜக செயல்படுகிறது. சேவை, நல்லாட்சி, ஏழைகளின் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடத்தி வருகிறார். அவரதுஆட்சியில் புதிய இந்தியா உருவாகி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியல் நாகரீகத்தை மாற்றிக் காட்டியுள்ளார். அவரது தலைமையில் இந்தியா மாபெரும் சக்தியாக திகழ்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு நட்டா தெரிவித்தார். காசி விஸ்வநாதர் கோயில்-கியான்வாபி மசூதி, மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரங்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்