Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மண்ணில் புதைந்திருந்த 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு

ஜுன் 02, 2022 08:57

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சாலை விரிவாக்கத்தின் போது மண்ணுக்குள் புதைந்திருந்த 2 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் நரசிங்கன்பேட்டை பகுதியில் கும்பகோணம் மயிலாடுதுறை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோர மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி, அதன் வேரையும் முழுமையாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நரசிங்கன்பேட்டை கஸ்தூரி அம்மன் கோயில் எதிரில் இருந்த பழமையான புளியமரத்தை அப்புறப்படுத்தினர். பொக்லைன் மூலம்  6 அடி பள்ளம் வெட்டி வேரினை அப்புறப்படுத்தியபோது கருங்கல்லாலான சுவாமி சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த சிலைகளை வெளியே எடுத்தபோது சுமார் 3 அடி உயரம் கொண்ட அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் கருங்கல் சிலைகள் என்பது தெரியவந்தது.

இச்செய்தி பரவியதை தொடர்ந்து  நரசிங்கன்பேட்டை பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். பின்னர் சிலைகளை சுத்தம் செய்து குங்குமம் மற்றும் மஞ்சள் வைத்து, பூ சாற்றி வணங்கினர். இது குறித்து நரசிங்கம்பேட்டை ஊராட்சி தலைவர் மாலதி சதீஷ்ராஜ் திருவிடைமருதூர் தாசில்தாருக்கு தகவல் அளித்ததன் பேரில், தாசில்தார் சந்தனவேல், விஏஓ சொக்கேஸ்வரன் ஆகியோர் வந்து சோதனை செய்தனர். பின்னர் 2 சிலைகளும் தாலுகா அலுவலகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

தலைப்புச்செய்திகள்