Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க , மின்வெட்டை சரிசெய்ய நடவடிக்கை தேவை: தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்

ஜுன் 03, 2022 12:54

சென்னை: மின்வெட்டை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று என்று தமிழக அரசை தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக விவசாயம், தொழில்கள், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. தேர்வுக்கு தயாராகும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, மின்வெட்டை சரிசெய்து, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி, மக்கள், மாணவர்களை மின்வெட்டில் இருந்து காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகிலேயே பருத்தி பின்னலாடைகள் உற்பத்தியில், 3-வதுபெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. பல கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த பருத்தி தொழில், இன்று நசிந்து பாழடைந்து கிடக்கிறது. பருத்தியின் லாபம் விவசாயிக்கு செல்லாமல், இடையில் நிற்கும் தரகர்கள், முதலாளிகளின் பதுக்கல் காரணமாக 150 சதவீதத்துக்கு மேல் உற்பத்தி விலைகூடி, நூல் விலை எட்டாத உயரத்துக்கு சென்றுவிட்டது. இதனால், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு பசி, பட்டினியால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை கண்டும் காணாததுபோல இருக்கும் மத்திய, மாநிலஅரசுகளை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. அதிகப்படியான பருத்தி ஏற்றுமதியை குறைத்து, பதுக்கலை நீக்கி, பருத்தி தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும்.

மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்து இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும். பாலியல்வன்கொடுமை, கொலை, கொள்ளை நடக்காமல் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக காக்க வேண்டும். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளான ஆகஸ்ட் 25-ம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி, மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்க வேண்டும். நாட்டு மக்களுக்கு நல்லதொரு வெளிப்படையான விஜயகாந்த் ஆட்சி ஏற்படுத்த தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் முழுமையாக உழைப்பது என்று இந்த நன்னாளில் சபதம் ஏற்க வேண்டும். இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தலைப்புச்செய்திகள்