Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய ரயில் பாலத்தில் இந்த ஆண்டு பயணிகள் ரயில் போக்குவரத்து

ஜுன் 04, 2022 02:00

ராமநாதபுரம், :ராமநாதபுரம் மாவட்டம்பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இந்த ஆண்டு பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் தென்னகத்து காசி என்றழைக்கப்படுகிறது. ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாக் ஜலசந்தி கடலில் பாம்பன் ரயில் பாலம் 1914ல் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதில்தான் ரயில் போக்குவரத்து நடக்கிறது. இப்பாலம் தலா 12.2 மீ., இடைவெளியில் 145 கர்டர்களுடன் 2.06 கி.மீ., அமைந்துள்ளது.

பாம்பன் பாலத்தின் மத்தியில் கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக இருபுறமும் துாக்குபாலம் 65.23 மீ., நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.மீட்டர்கேஜ் ரயில் இயக்கத்திற்காக அமைக்கப்பட்ட இப்பாலம் 2006 --07 ல் அகல ரயில் பாதைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது. 100 ஆண்டு பழமையான இந்த பாலம் புயல், மழையால் சேதமடைந்து வருகிறது. மேலும் கடல் மட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கர்டர்கள் கடல் நீரால் துருப்பிடித்து அடிக்கடி சேதமடைந்ததால் இக்கடலில் புதிய ரயில் பாலம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. 2019 மத்திய பட்ஜெட்டில் இதற்காக ரூ.279 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

பாம்பன் புதிய பாலம் 18.3 மீ., உயரத்தில் 99 கர்டர்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் மத்தியில் இருபுறங்களையும் இணைத்து 'லிப்ட்' போல மேலே செல்லும் வகையில் துாக்கு பாலம் அமைய உள்ளது. எதிர்காலத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் துாண்கள் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு ரயில் பாதைக்கான கர்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

கடல் மண் பரிசோதனை அடிப்படையில் 1.5 மீ., சுற்றளவுள்ள துாண்கள் அமைக்கப் படுகின்றன. கர்டர்கள் ஒவ்வொன்றும்18.3 மீ., இரும்பு தகடுகளால் உருவாக்கப்படுகின்றன. இதனை பிரம்மாண்ட டவர்கள் மூலம் செங்குத்தாக உயர்த்தும் வகையில் 72.5 மீ., நீள மெகா லிப்ட் தயாராகி வருகிறது.

பாம்பன் பாலத்தின் கட்டுமானப்பணிகளுக்காக ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டுமான பொருட்கள் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்படுகின்றன.பாம்பன் புதிய ரயில் பாலத்தை சாலை போக்குவரத்து பாலத்திற்கு இணையாக 17 மீ., வரை உயர்த்த முடியும்.
இதன் மூலம் பெரிய கப்பல்களும் ராமேஸ்வரம் வந்து செல்ல வழி ஏற்படும். கடலுக்கு நடுவில் 35 மீ., ஆழத்திற்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டு துாண்கள் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும்.இதையடுத்து புதிய ரயில் பாலம் நடப்பு நிதியாண்டில் பயணிகள் ரயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்