Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

படிப்படியாக தன் தனித்துவத்தை இழக்கும் மதுரை தேஜஸ் ரயில்

ஜுன் 04, 2022 10:57

சென்னை : சென்னை எழும்பூர் -- மதுரை இடையே இயக்கப்படும், 'தேஜஸ்' சொகுசு விரைவு ரயில், படிப்படியாக தன் தனித்துவத்தை இழந்து வருகிறது. எனவே, இந்த ரயிலின் பராமரிப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேச தரத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களோடு, சென்னை, பெரம்பூர் ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்ட சொகுசு ரயில் பெட்டிகளுடன், எழும்பூர் -- மதுரை இடையே இயக்கப்படுகிறது தேஜஸ் ரயில். இந்த ரயிலின் சேவைக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், சமீப காலமாக இந்த ரயிலில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களில் தொழில்நுட்ப குளறுபடிகள் ஏற்படுவதாக, பயணியர் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல, போதிய அளவில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுவது இல்லை என்கின்றனர்.

இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: இந்த சொகுசு ரயிலில், சரியான நேரத்துக்கு பயணிக்க முடிகிறது. ஆனால், சமீப காலமாக பயணியருக்கான பொழுதுபோக்கு அம்சங்களில் அடிக்கடி குளறுபடி ஏற்படுகிறது. குறிப்பாக, வீடியோ திரைகளில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. 'லைவ் டிவி' முழுமையாக செயல்படுவதில்லை. ரயில் பெட்டிகளில், போதிய அளவில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. எனவே, மற்ற ரயில்களை விட, அதிக கட்டணம் செலுத்தி பயணிப்பவர்களுக்கான சேவையை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

தலைப்புச்செய்திகள்