Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிக்கிறது: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி

ஜுன் 04, 2022 01:11

சென்னை: ''சென்னை: ''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சந்தி சிரிக்கிறது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., சட்டசபையில் எவ்வாறு செயல்படுகிறது என்பது, நாட்டு மக்களுக்கு தெரியும்.தமிழக பா.ஜ., துணைத் தலைவர் துரைசாமி, அ.தி.மு.க.,வுக்கு சான்று அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் மக்கள் பிரச்னைகளை, புள்ளி விபரங்களுடன் சட்டசபையில் தெரிவிக்கிறோம். பா.ஜ., சட்டசபை கட்சி தலைவர் எப்படி பேசுகிறார் என்பது, நாட்டு மக்களுக்கு தெரியும்.

வி.பி.துரைசாமி, எந்த கட்சியில் இருந்து, பா.ஜ.,வுக்கு போனார் என்பது தெரியும். நான், 48 ஆண்டுகளாக ஒரே கட்சியில் உள்ளேன்; அவரை போல் கட்சி மாறவில்லை. அனைத்து கட்சிகளும் வளர வேண்டும் என்று தான் நினைக்கும். பா.ஜ., வளர்ந்துள்ளதா என்பது கற்பனையான கேள்வி. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக, முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொலை நடக்காத நாள் இல்லை. வழிப்பறி, திருட்டு, கட்டப்பஞ்சாயத்து தொடர்ந்து நடக்கிறது. ஓராண்டில் ஏராளமான கொலைகள், திருட்டு, செயின் பறிப்புகள் நடந்துள்ளன.

இதை தட்டி கேட்க திறமை இல்லாத அரசாக, தி.மு.க., அரசு உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், முறையாக கவனிக்காததால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிக்கிறது.அ.தி.மு.க., ஆட்சியில், சட்டத்தின் ஆட்சி நடந்தது. யார் குற்றம் செய்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்தோம்; அரசியல் தலையீடு இல்லை. இன்று தி.மு.க.,வினர், ஆங்காங்கே காவல் நிலையத்தில் தலையிட்டு, குற்றவாளிகளை காப்பாற்றுகின்றனர். இதனால், குற்றங்கள் குறையவில்லை.

போதைப் பொருள், கஞ்சா விற்காத இடம் இல்லை. அரசால் தடுத்து நிறுத்த முடியாத சூழல் உள்ளது. ஆளும் கட்சியினர், கஞ்சா விற்பவர்களுக்கு துணை நிற்கின்றனர். இதனால், காவல் துறையால் குற்றவாளிகளை தடுக்க முடியவில்லை.ஸ்டாலின் நேரடியாக தன் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், விமர்சனம் வரும் என்பதால், கொல்லைப்புற வழியாக அமைச்சராக்க முயற்சிக்கிறார். எனவே, பல இடங்களில் தீர்மானம் போடுகினறனர். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

தலைப்புச்செய்திகள்