Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனியார் பஸ் - சரக்கு வாகனம் மோதல்தீப்பிடித்து 7 பேர் பலி

ஜுன் 04, 2022 02:41

கலபுரகி:தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதிலிருந்து கோவாவுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ், சரக்கு வாகனம் மீது மோதி தீப்பிடித்ததில், ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நிலை மோசமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
தெலுங்கானா ஹைதராபாதிலிருந்து கோவாவிற்கு 35 பயணியருடன் சொகுசு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை 6:30 மணியளவில் கலபுரகி கமலாபூர் டவுன் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டெம்போ சரக்கு வாகனம் மீது மோதியது.

கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பாலம் தடுப்பு சுவர் மீதும் மோதி கவிழ்ந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக பஸ்சில் இருந்தவர்களை காப்பாற்றினர். திடீரென தீப்பிடித்ததால், அனைவரும் விலகி ஓடினர்.தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். பின், இடிபாடுகளில் சிக்கி, ஏழு பேர் உயிரிழந்தது தெரியவந்தது.

படுகாயமடைந்த 11 பேர் கலபுரகியின் பல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.இந்த பஸ்சில், இரு குடும்பங்களை சேர்ந்தோர் பயணித்தது தெரியவந்துள்ளது. செகந்தராபாதை சேர்ந்த பொறியாளர் அர்ஜுன் குமார் மகன் பிறந்தநாளை கொண்டாடி விட்டு, ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது, விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.படுகாயமடைந்த டெம்போ சரக்கு வாகன ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஸ் ஓட்டுனரிடம் விசாரிக்கின்றனர்.
மாவட்ட போலீஸ் எஸ்.பி., இஷா பந்த் கூறுகையில், ''முதல்கட்ட விசாரணையில் எட்டு பயணியர் உடல் கருகி உயிரிழந்திருக்கலாம். ஆனாலும், உறுதியாக எத்தனை பேர் என்பதை கூற முடியாது,'' என்றார்

தலைப்புச்செய்திகள்