Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி பஸ்கள் ஓடவில்லை: திடீர் போராட்டம்

ஜுன் 04, 2022 03:19

புதுச்சேரி: புதுவை அரசு சாலை போக்குவரத்துக்கழகத்தில் இளநிலை எழுத்தராக பணிபுரிபவர் பாவாடை. இவர் நேற்று முன்தினம் பொது மேலாளர் ஏழுமலையுடன் 100 அடி சாலையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு பி.ஆர்.டி.சி.யில் கண்டக்டராக வேலை பார்க்கும் கொம்பாக்கத்தை சேர்ந்த வேலைய்யன் வந்திருந்தார். அப்போது வேலைய்யன், இளநிலை எழுத்தர் பாவாடையிடம், தொழிலாளர்களின் செலவு, அரியர்ஸ் தொகை எப்போது கிடைக்கும்? என கேட்டுள்ளார். இதில் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாவாடையை, வேலைய்யன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாவாடை முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வேலைய்யன் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று பாவாடைக்கு ஆதரவாக வேலைய்யன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பி.ஆர்.டி.சி. நிர்வாக அலுவலக ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இன்று பி.ஆர்.டி.சி. கண்டக்டர், டிரைவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியேற முடியாதபடி பஸ்களை குறுக்கே நிறுத்தினர்.

இதனால் அதிகாலை 4 மணி முதல் பி.ஆர்.டி.சி. பஸ்கள் எதுவும் செல்லவில்லை. பஸ்கள் அனைத்தும் பணிமனைக்குள் நிறுத்தப்பட்டிருந்தது. வேலைய்யன் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனக்கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பிற்பகல் வரை பஸ்கள் ஓடவில்லை. நிர்வாகம் தரப்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்