Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரி அரசின் மின்துறையை தனியார் மயமாக்க கூடாது: திருச்சி சிவா கடிதம்

ஜுன் 04, 2022 03:23

புதுச்சேரி: தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா மத்திய மின்சக்தி மந்திரி ராஜ்குமார்சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு மக்களின் நலன், மாநிலங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மே 2020-ல், மத்திய நிதியமைச்சர் 8 யூனியன் பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்குவதாக அறிவித்தார். 

இது புதுவையில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. மின்விநியோகம் அரசியலமைப்பின் 7-ம் அட்டவணை பட்டியலின் கீழ் வருகிறது. இது அந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மக்களுக்கு மறுக்க முடியாத வகையில் நன்மையாக இருந்தால் மட்டுமே மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள முடியும்.  லாபகரமாக இயங்கி வரும் மின்துறை, புதுவை அரசுக்கு சொந்தமானது, காரைக்கால் பகுதியில் 33 மெகாவாட் எரிவாயு மின் நிலையத்தை இயக்குகிறது. இது புதுவையை தன்னிறைவுபடுத்துகிறது. புதுவை மின்துறை நாட்டிலேயே தன்னிகரற்று லாபத்தில் இயங்கி வருகிறது. 

எனவே புதுவையில் மின்சாரத்தை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியமே இல்லை. தனியார்மயத்தால் மின் கட்டணம் உயரும்.  விவசாயத்திற்கும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார பலன்கள் திரும்பப் பெறப்படலாம். 2 ஆயிரம் மின்துறை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. 
எனவே புதுவை மக்களின் நலன் கருதி மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்