Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூட்டுறவு பணியாளர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிடக் கோரி வேலைநிறுத்தம் செய்ய முடிவு

ஜுன் 06, 2022 11:54

நாமக்கல்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிடக் கோரி ஜூன் 27-ம் தேதி முதல் மாநில தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி. காமராஜ்பாண்டியன் தெரிவித்தார். நாமக்கல்லில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற சங்க பொதுச்செயலாளர் பி. காமராஜ்பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ''தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் விதிமீறல் எனக் கூறி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக்கோரி சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 6ம் தேதி முதல் (இன்று) தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். எங்களது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் ஜூன் 27-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும்'' என்றார். இந்தக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி சங்க நிர்வாகிகள் பலரும் பேசினர். நாமக்கல் மாவட்ட செயலாளர் கருப்பண்ணன், மாவட்ட தலைவர் பி. சிவசங்கரன், பொருளாளர் எம். பி. காமராஜ் உள்பட பல்வேறு மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்