Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

ஜுன் 07, 2022 10:32


சென்னை: "ஒரு சமயத்தாரை மட்டும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் இந்த திமுக அரசு செய்யும் காரியங்களைக் கண்டு பாஜக அமைதியாக இருக்காது" என்று சிதம்பரம் கோயில் விவகாரத்தில் தமிழக அரசுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்ய இன்று காலை சென்ற இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றனர்.இது குறித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, "சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுதான் நீதி, மனுநீதி, மனுதர்மம். எனவே தீட்சிதர்கள் ஆய்வுக்கு வரும் குழுவினருக்கு சட்டத்தின்படி அவர்கள் கேட்கிற விளக்கங்களை அளிப்பதுதான் சட்டத்தின்படி உகந்ததாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இது குறித்து தனது ட்விட்டர் பதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிடுகையில்ம், "மே 23-ஆம் தேதி, சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரை திமுக அரசு கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராடினார்கள். கயவனை தண்டிக்காமல், போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலை முற்றுகையிட்டுள்ளது இந்து சமய அறநிலையத் துறை.அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலில் அரசுக்கு என்ன வேலை? தொடர்ச்சியாக ஒரு சமயத்தாரை மட்டும் மனவருத்தத்துக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் இந்த திமுக அரசு செய்யும் காரியங்களைக் கண்டு தமிழக பாஜக அமைதியாக இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவில் கூறியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்