Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க., அ.ம.மு.க. உறவு வெட்ட வெளிச்சமாகிவிட்டது: எடப்பாடி

மே 09, 2019 06:56

தூத்துக்குடி: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி விமானநிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் இணைந்து செயல்பட்டு வருவதாக, ஏற்கனவே நான் பல்வேறு கூட்டங்களில் தெரிவித்து வந்தேன். தற்போது தங்கதமிழ்செல்வன் மூலமாக அது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்கள் இல்லாமல் மைனாரிட்டி ஆட்சி நடத்தியது தி.மு.க. தான்.

அ.தி.மு.க. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி நடத்தியது, நடத்தியும் வருகிறது, இனிமேலும் நடத்தும்.

22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெற்று முழு பெரும்பான்மையுடன் எங்களுடைய ஆட்சி தொடரும். எதிர் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்கள் அப்படி நினைக்கவில்லை. அவர் கனவு என்றுமே பலிக்காது என்பது மக்களுக்கு தெரியும். அது ஒரு அர்ப்ப ஆசை. வருகிற 23-ந்தேதிக்கு பிறகு அவர் கனவு கூட காண முடியாது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் திறமையான மாணவர்கள். கல்வியிலேயே தமிழகம் முதன்மையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக 2019-ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 304 நிறுவனங்கள் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 

அந்த திட்டங்கள் எல்லாம் நிறைவேறும் போது படித்த இளைஞர்களுக்கு நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5.50 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும். புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த 10 தொழில் நிறுவனங்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்ததன் பேரில் வருகிற ஜூன் மாதம் அந்த 10 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 10.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடிய ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி.

தேர்தல் ஆணையம் என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு. அதில் யாரும் குறுக்கிட முடியாது. பாரபட்சமின்றி அனைவர் மீதும் வழக்குப் போடுகிறார்கள். வேண்டும் என்றே தோல்வி பயத்தின் காரணமாக எதிர் கட்சிகள் தவறான கருத்தினை மக்களிடத்திலே பரப்பி வருகிறார்கள்.

தோற்றால் இந்த காரணத்தை அவர்கள் சொல்லுவார்கள். வெற்றி பெறுகின்ற கட்சி இது போன்ற கருத்துகளை தெரிவிக்கமாட்டார்கள். தோல்வி பெறுகின்ற கட்சி தோல்வி பயத்தின் காரணமாக இப்படிப்பட்ட அப்பட்டமான குற்றச்சாட்டை தெரிவிக்கிறார்கள்.

இந்த தேர்தலில் நாங்கள் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி, மக்களைச் சந்தித்து வாக்குகளைப்பெற பணியாற்றியுள்ளோம். கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்