Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வருக்கு பரிசாக கலெக்டர் வழங்கிய புத்தகம் பெரும் சர்ச்சை

ஜுன் 11, 2022 10:37

புதுக்கோட்டை,:புதுக்கோட்டையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழக முதல்வர் வருகை தந்தபோது, மாவட்ட கலெக்டர், முதல்வருக்கு அளித்த புத்தகப்பரிசின் தலைப்பு தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கடந்த 8-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். விழா மேடைக்கு அவர் வருகை தந்தபோது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு அவருக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, தான் அளித்த புத்தகம் குறித்து மாவட்ட கலெக்டர் கவிதாராமு அவரது பேஸ்புக் பக்கத்தில் தமிழக முதல்வருக்கு அறியப்படாத கிறிஸ்தவம் என்ற புத்தகத்தை பரிசாக நான் வழங்கியுள்ளேன் என்றும், தமிழ் மண்ணுக்கு என தனி அடையாளம் உண்டு அதன் பண்பாட்டை கூர்ந்து கவனித்தால் அதன் தனித்தன்மை விளங்கும். இஸ்லாமிய தீ மிதிபடும் கிருத்துவர்கள் திருவிழா கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா கொண்டாடுவது இந்துக்கள் தர்காவில் சென்று வருவதும் இயல்பாக அன்றாடம் நடக்கக்கூடிய நிகழ்வாக தமிழகத்தில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் கிறிஸ்தவம் பரவிய விதம் அதன் வரலாறு அம்மதத்தின் சின்னங்கள் பண்டைய ஆலயங்கள் கத்தோலிக்கம் சீர்திருத்த கிருத்துவம் உள்ளிட்டவைகளால் இந்த மண்ணின் தமிழ் பண்பாட்டை கிருத்துவம் தனக்குள் இழுத்துக் கொண்டது கிருத்துவத்தை நம் பண்பாடு செழுமை ஆக்கியது, ஒற்றுமைக்கும் சமய நல்லிணக்கம் நாட்டுக்கே வழிகாட்டியாக விளங்கும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு மதவாத அடிப்படைவாத பாசிச சக்திகளுக்கு எப்போதுமே இடமளிப்பதில்லை இன்றளவும் ஒற்றுமையாக இணக்கமாக வாழும் பண்பட்ட சமூகம் நாம் தமிழ் நாட்டின் சிறுபான்மை மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு நம் தமிழக அரசு எனவே கிறிஸ்துவம் பற்றியும் மதநல்லிணக்கம் குறித்தும் பேசும் இந்த நூல் மிக முக்கியமானதாகிறது. சிறுபான்மையின மக்களுக்கு உரிய இடத்தை உறுதி செய்து சமயங்களுக்கு நட்புறவைப் பேணும் நம் முன்னோடி மாநிலத்தில் இவ்வாறான நூல்கள் வெளிவரும் மதங்களை தாண்டி மக்களின் கவனம் பெறுவதும் அவசியம் என நான் நினைக்கிறேன். எனவே தான் தமிழக முதல்வருக்கு இந்த நூலை பரிசாக அளித்தேன் என்று இவ்வாறு அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவருடைய பதிவு தற்போது பா.ஜ.க., உள்ளிட்ட பலரது மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பில் உள்ள மாவட்ட கலெக்டர் ஒரு மதத்தை துhக்கிப் பிடிப்பதற்காக இவ்வாறு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்றும் இது அவர் வகித்துவரும் பொறுப்புக்கு அழகல்ல என்றும் இவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க., தலைவர் செல்வஅழகப்பன் உள்ளிட்ட பா.ஜ.க.,வினர் தங்களது பேஸ்புக் பக்கத்தில் கலெக்டரின் கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும், மாவட்ட கலெக்டரின் கருத்து மற்றும் முதல்வருக்கு அவர் வழங்கிய புத்தகம் இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் பா.ஜ.க.,வினர் பதிவு செய்து வரும் கருத்துக்கள் ஆகியவை தற்போது மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவரது பல்வேறு கருத்துக்கள் பல சமயங்களில் பேசு பொருளாக மாறி இருந்தது குறிப்பாக பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர்உசேன் ஸ்ரீரங்கம் கோவிலில் அவமதிக்கப்பட்டது தொடர்பாக, கலெக்டர் கவிதாராமு அவரது பேஸ்புக் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவு செய்திருந்தார். இது பா.ஜ.க., உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள் மத்தியில் விவாத பொருளாக மாறி இருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுமுன் தான் மாவட்ட கலெக்டரின் புகைப்படத்தை பயன்படுத்தி வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு இது சர்ச்சையான நிலையில், தற்போது மாவட்ட கலெக்டர், முதல்வருக்கு பரிசளித்த புத்தகம் தலைப்பும் அதற்கு அவர் அளித்துள்ள விளக்கம் விவாத பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்