Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தினகரன் விடுவிப்பு ஏன்

ஜுன் 15, 2022 11:36

சென்னை : இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.ம.மு.க. பொதுச் செயலர் தினகரன் விடுவிக்கப்பட்டது தமிழக அரசியில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பரவலாக கூறப்படுவதாவது: கடந்த 2016 டிசம்பரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததும் அ.தி.மு.க. பிளவுபட்டது. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சசிகலா ஆதரவு அணிக்கு இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும் என தினகரன் முயன்றார். அப்போது தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது; 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக தினகரன் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு டில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்ற அனைவரும் ஜாமினில் வெளியே உள்ளனர்.அப்போது நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டில்லி அமலாக்க பிரிவு அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தினகரனுக்கு பல முறை 'சம்மன்' அனுப்பி விசாரித்தனர்.

டில்லி திஹார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரை காவலில் எடுத்து அமலாக்க துறையினர் விசாரித்தனர். விசாரணையில் பண பரிமாற்றம் தொடர்பான பல தகவல்களை அவர் அளித்துள்ளார்.சுகேஷ் சந்திரசேகரையும் தினகரனையும் அதிகாரிகள் மாறி மாறி விசாரித்தனர். அதில் கிடைத்த விபரங்களை வைத்து தினகரனை வழக்கில் இருந்து விடுவிக்க அமலாக்க துறையினர் முடிவெடுத்தனர். சில நாட்களுக்கு முன் அமலாக்க துறையினர் டில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் தினகரன் பெயர் விடுவிக்கப்பட்டது.

இதன் பின்னணியில் பெரும் அரசியல் நகர்வுகள் உண்டு. தமிழகத்தில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி யார் என்பதில் அ.தி.மு.க. -- பா.ஜ. இடையே போட்டி இருந்தாலும் ஆளும்கட்சியான தி.மு.க.வை களத்தில் போதுமான பலத்துடன் எதிர்கொள்ள அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணி அவசியம். இப்போதைக்கு மோதல் போக்கில் இருப்பதுபோல பா.ஜ. செயல்பட்டாலும் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் எல்லாவற்றையும் சரி செய்து விடும்.

அ.தி.மு.க. - அ.ம.மு.க. ஒன்றிணைந்த கூட்டணியை உருவாக்க பா.ஜ. விரும்புகிறது. அதற்கு இது நாள் வரை தடையாக இருந்தது தினகரன் மீது அமலாக்கத் துறை போட்டிருந்த வழக்கு தான். அதில் இருந்து தினகரன் விடுக்கப்பட்ட நிலையில் இனி எதுவும் சாத்தியம் தான்.

புது கூட்டணியில் அ.தி.மு.க. -- அ.ம.மு.க. மட்டும் அல்லாது தே.மு.தி.க. -- பா.ம.க. மற்றும் புதிய தமிழகம் கட்சிகளும் இடம்பெற வேண்டும் என பா.ஜ. தேசிய தலைவர்கள் விரும்புகின்றனர். அதற்கு காரணம் தமிழக எதிர்ப்பாளர்களை வரும் லோக்சபா தேர்தலில் வீழ்த்துவதற்கு பா.ஜ. புதிய திட்டம் வகுத்துள்ளது.

சிவகங்கை தொகுதியில் கார்த்திக்கு எதிராக தினகரனை நிறுத்த திட்டமிட்டுள்ளது. முக்குலத்தோர் அதிகம் இருக்கும் அந்த தொகுதியில் தினகரன் போட்டியிட்டால் கார்த்திக் சிதம்பரம் தோற்பது உறுதி. அதேபோல விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூரை தோற்கடிக்க தே.மு.தி.க.வின் பிரேமலதாவை வேட்பாளராக்கும் திட்டமும் பா.ஜ.விடம் உள்ளது.

நாயுடு இனத்தவர் அதிகம் இருக்கும் அந்த தொகுதியில் பிரேமலதா போட்டியிட்டால் மாணிக் தாகூரின் தோல்வி உறுதியாகி விடும். அதேபோல திருமாவளவன், ரவிகுமார், ஜோதிமணி, கதிர் ஆனந்த் ,டி.ஆர்.பாலு, தயாநிதி, ஆ.ராசா, டாக்டர் செந்தில்குமார், மதுரை வெங்கடேசன் உள்ளிட்ட பலரை வீழ்த்த இப்போது இருந்தே வியூகங்கள் வகுக்கப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது. 
 

தலைப்புச்செய்திகள்