Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆட்சியும் மாறும்; அனைத்தும் மாறும்: அன்புமணி அபார நம்பிக்கை

ஜுன் 17, 2022 07:38

புவனகிரி:  பா.ம.க கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர், கீரப்பாளையம் சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் இல்லத் திருமணம் சிதம்பரம் பைசல் மகாலில் நடந்தது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., தலைமை தாங்கி திருமணத்தை நடத்திவைத்தார். 

அப்போது அவர் பேசியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ் பொது வாழ்க்கைக்காகவும், தமிழக முன்னேற்றத்திற்காகவும் 43 ஆண்டுகளாக போராடி வருகிறார். அனைத்து மக்களும் முன்னேற்றம் காண வேண்டும் அதற்கு சமூகப் பிரச்னை முட்டுக்கட்டையாக உள்ளது. முதலாவதாக இருப்பது மது சார்ந்த பிரச்னை. எனக்கு ஓட்டு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் மக்கள் பிரச்சனை சரியாக வேண்டும் .

அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல சிந்தனையோடு போராடி வருகிறோம். கடந்த முறை எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டபோது தோல்வி அடைந்தேன். அதற்கு காரணம் மதுவிலக்கை முன்வைத்ததால் தோல்வி அடைந்தேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. தமிழகத்தில் கலாச்சாரம் மாறவேண்டும். குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தால் படித்தவர்கள் படிக்காதவர்கள் பலர் பொருளாதாரங்களை இழந்து, தற்கொலை செய்து வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். இது சமூக பிரச்னை என்பதால் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

மக்களுக்காக போராட கூடிய ஒரு கட்சி இருக்குமென்றால் அது எதிர்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு எல்லாம் ஓட்டு பிரச்னைதான் பெரும் பிரச்னை; நமக்கு நாட்டுப் பிரச்னையை நல்ல பிரச்னையாக கருதி கொண்டிருக்கின்றோம். 

பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள் அவர்களை அரசு பணிக்கு அமர்த்த வேண்டும். 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை எதிர்காலத்தில் மீட்டெடுப்போம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆதிதிராவிடர், மீனவர்கள் உள்ளிட்ட பிற சமுதாயத்தில் இருப்பவர்களையும் முன்னேற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய கொள்கை.

எந்த கட்சிக்காரர்களும் போராட மாட்டார்கள். தமிழகத்தில் மாற்றம் தேவை. அதற்காக 2.0 என்ற திட்டத்தை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். இலவசக் கல்வி, இலவச மருத்துவம் முன்னிலைப்படுத்த வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கடலூர் மாவட்டம் வடிகால் மாவட்டமாக உள்ளது. 

கர்நாடகா, கேரளா, தர்மபுரியில் மழை பெய்தால் நமது கடலூர் மாவட்டம் மழை தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. 55 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மக்களை இலவசம் என்ற பெயரில் ஓட்டுக்காக மக்களை வஞ்சித்துள்ளனர். இந்த தேக்க நிலை மாறவேண்டும். தமிழகத்திலேயே மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும். அனைத்தும் மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்