Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணலி அருகே விஷ வாயு கசிவு?

ஜுன் 24, 2022 08:30

மணலி: மணலி அருகே, அரியலுார் கிராமத்தில் ரசாயன வாயு கசிவால், மணலி சுற்றுவட்டார பகுதி மக்கள் உடல் உபாதைகளால் கடும் அவதியடைந்தனர். இதனால், அப்பகுதியில் வசிப்போருக்கு, கண் எரிச்சலும், தொண்டை அலர்ஜியும் ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி, மணலி, 17வது வார்டு, ஆண்டார்குப்பம் செக் போஸ்ட், அரியலுார் கிராமத்தில், தனியார் வேதிப்பொருள் குடோன் உள்ளது.நேற்று காலை, மலேஷியாவில் இருந்து கன்டெய்னர் லாரியில், எச்.ஐ.வி., நோய்க்கான மருந்து தயாரிக்கும் மூலப்பொருட்களான, குளோரோ - 2, குளோரோ - 5 உள்ளிட்ட வேதிபொருட்கள் பேரல்களில் எடுத்து வரப்பட்டன.

பேரல் ஒன்றிற்கு 250 கிலோ வீதம், 80 பேரல்களில், 20 ஆயிரத்து 840 கிலோ அளவிலான, வேதிப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டது. அப்போது, திடீர் கசிவு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசியது.இதனால், அரியலுார் கிராமத்தை ஒட்டிய சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு, கண் எரிச்சல், தொண்டை அலர்ஜி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.தகவலறிந்து, மணலி மண்டல நல அலுவலர் சரஸ்வதி, செயற்பொறியாளர் காமராஜர், மண்டல குழு தலைவர் ஆறுமுகம், மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம், தொழிற்சாலை பாதுகாப்பு துறை துணை இயக்குனர் பாலமுருகன் உள்ளிட்டோர், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

வேதிப்பொருள் கசிவால், 10 அடி சுற்றளவில் இருந்தவர்களுக்கு, கண் எரிச்சல் மற்றும் தொண்டை அலர்ஜி ஏற்பட வாய்ப்புண்டு. சுற்றுவட்டார கிராம மக்கள் பாதிக்க வாய்ப்பில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், குடோன் உரிமையாளரிடம் அறிவுறுத்தி, உடனடியாக வேதிப்பொருட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஹைதராபாதிற்கு கொண்டு செல்லப்பட்டன.

 இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 'அரியலுார் வேதிப்பொருள் குடோனில் ஏற்பட்ட கசிவு பிரச்னையை அடுத்து, மணலி மண்டலத்தில் இருக்கும் அனைத்து, தொழிற்சாலைகள், குடோன்களை ஆய்வு செய்யுமாறும், அபாயகரமான ரசாயன மற்றும் வேதிப்பொருட்களை கவனமாக கையாளவும் அறிவுறுத்த வேண்டும்' என, மாநகராட்சி அதிகாரிகளுக்கு மண்டல குழு தலைவர் ஆறுமுகம் அறிவுறுத்தினார்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ., சுதர்சனம், 'தவறு இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. குடோன் நிர்வாகத்தின் மீதும், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்