Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மன்னராக பிறந்து மக்கள் தலைவனாக மறைந்த விஸ்வநாத் பிரதாப் சிங் பிறந்த தினம் இன்று.... 

ஜுன் 25, 2022 02:25

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்  என்கிற விஸ்வநாத் பிரதாப் சிங் பிறந்த நாள் ஜூன் -25....  உத்தரப்பிரதேசத்தில் பிறந்து,  இந்தியாவின் பிரதமராக உயர்ந்த வி.பி.சிங்குக்குத் தமிழகத்தோடு நெருக்கமான தொடர்பு உண்டு.  உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார். படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய வி.பி.சிங், அணுசக்தி விஞ்ஞான பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.

அரச குடும்பம், செல்வாக்கான வாழ்வு என்றிருந்தவர் வி.பி.சிங். வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தின் செயல்பாடுதான் வி.பி.சிங்கின் பொதுவாழ்வில் குறிப்பிடத்தக்க முதல் விஷயம். அவரின் பூமிதான இயக்கத்துக்கு தனது சொந்த நிலங்களைத் தானமாக வழங்கினார். எளிய மக்களின்மீது அக்கறையும், சமூக நீதி எண்ணமும் கொண்டிருந்த வி.பி.சிங், 1969-ல் தேர்தல் அரசியலில் வென்றார். உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் என்னும் பரமபதத்தை வி.பி.சிங் தனது நேர்மையாலும் திறமையாலும் திறம்பட எதிர்கொண்டு அதில் வெற்றியும் கண்டார். எம்.எல்.ஏ-வாகத் தேர்வான அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1971-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார். வி.பி.சிங்கின் திறமையை அறிந்த இந்திரா காந்தி, தனது அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக அவரை நியமித்தார்.

1989-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய முன்னணியைக் கட்டமைத்து, ஆட்சியையும் அமைத்துக் காட்டினார், வி.பி.சிங். டிசம்பர் 1, 1989 அன்று, வி.பி.சிங் நாடாளுமன்ற அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால், பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். இந்திய அரசியலின் மிகச் சிறந்த தருணங்களில் அதுவும் ஒன்று. பாபா சாகேப் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கையே சேரும்.

”ஆயிரம் ஆண்டு பழமை நிறைந்த முறையை எதிர்த்து போராடி வருகிறோம் என்பது எமக்குத் தெரியும். அவ்வாறு செய்திடும்போது, நாங்கள் சிக்கலுக்கும், சிரமத்திற்கும் ஆளாவோம் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.”  இது, 1990-ஆம் ஆண்டு, நவம்பர் 7-ஆம் தேதி, அன்றைய பிரதமர் வி.பி.சிங், தனது அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது நடந்த விவாதத்தில் மக்களைவையில் கூறியவை. அரசியலில் நேர்மை, சமுதாய ஒற்றுமையில் அக்கறை, மதசார்பின்மை கொள்கை, சமுக நீதி  இதனைக் காப்பாற்ற அதிக விலை கொடுத்தவர் வி.பி.சிங்.

இன்று, பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ காரணமாக இருந்தவர். அதாவது காங்கிரசிலிருந்து வி.பி.சிங் வெளியேறி, ஜன்மோர்ச்சா அமைப்பை தொடங்கி, பின்னர் ஜனதா தளம் எனும் கூட்டமைப்பை துவங்கி, தேர்தலில் வெற்றி பெற்று 1990-ல் பிரதமர் ஆனதற்கு பின்புதான் அந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. தேர்தல் நேரத்தில் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதிகளின் முதன்மையானது, ஆட்சிக்கு வந்தால், மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்றுவேன் என கூறியவாறு, வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திடும் ஆணையை 1990 ஆகஸ்டு 7-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 

இன்று மக்களவையில் பெரியார் வாழ்க என்ற முழக்கத்துடன், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றார்கள் என்றால், அதற்கு முன்னோடியாக 1990-லேயே, நாடாளுமன்றத்தில் தந்தை பெரியாரின் பெயரை முழங்கியவர் வி.பி.சிங்.. தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்கியதில் திமுக தலைவர் கருணாநிதியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், தமிழகத்தைக் கெளரவப்படுத்தும் வகையிலும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் முரசொலி மாறனை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார் வி.பி.சிங். மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற்றது அதுதான் முதன்முறை

பிரதமர் பொறுப்பேற்றபிறகு தமிழகம் வந்த பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னையில் பாராட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் அவருக்கு முக்கியமான கோரிக்கையை வைத்தார் தமிழக முதல்வர் கருணாநிதி. அது, சென்னையில் இருக்கும் இரண்டு விமான நிலையங்களுக்கு காமராஜர், அண்ணா பெயர்களைச் சூட்டவேண்டும் என்பதுதான். உடனடியாக ஹாட்லைனில் டெல்லிக்குத் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் வி.பி.சிங், சென்னை உள்நாட்டு விமான முனையத்துக்கு காமராஜர் பெயரும், பன்னாட்டு விமான முனையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்படும் என்று மேடையிலேயே அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது நடந்த முக்கியமான காரியங்களுள் ஒன்று, இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிகாக்கும் படையை முழுமையாகத் திரும்பப்பெற்ற நிகழ்வு. உண்மையில், ராஜீவ் பிரதமராக இருந்தபோதே படைகளைத் திரும்பப்பெறுவது குறித்த நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன. ஆனால் அது படிப்படியாகவும் மந்தகதியிலுமே நடந்தது. ராஜீவ் – பிரேமதாசா ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்திய அமைதிப்படை திரும்புமா என்பதில் சந்தேகம் எழுந்தது. எவ்வளவு காலத்துக்கு இந்திய அமைதிப்படை இலங்கையில் தொடர்கிறோ அவ்வளவு காலத்துக்குப் பதற்றம் தொடரும் என்பது போன்ற சூழல் இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் தமிழகத்தில் இருந்து அமைதிப்படையை முழுமையாகவும் விரைவாகவும் திரும்பப்பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அப்போது பிரதமர் வி.பி.சிங்கிடம் இந்திய அமைதிப்படை விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. அதனைப் பரிசீலித்த அவர், ”1990 மார்ச் மாதத்துக்குள் இந்திய அமைதிப்படையின் கடைசி வீரர் இந்தியா திரும்புவார்” என்று உறுதியாக அறிவித்தார். அதன்பிறகே அமைதிப்படை விரைந்து இந்தியா திரும்பியது. 1990 மார்ச் 24 அன்று இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறியது. அதுநாள்வரை இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகள் விடுதலைப்புலிகளின் அதிகார வரம்புக்குள் சென்றது அதன்பிறகுதான். தொண்ணூறுகளுக்குப் பிறகு அந்தப் பகுதிகளைத்தான் தமிழீழம் என்றனர் விடுதலைப்புலிகள்.

அப்போது இந்திய அமைதிப்படைக்கு சென்னை துறைமுகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி பங்காற்காமல் தவிர்த்துவிட்டார். இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவம் கொடுந்தாக்குதலைத் தொடுத்ததால் அமைதிப்படையைக் கடுமையாக விமர்சித்த அவர், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி, பிறகு அடங்கிப்போனது.
 தமிழகத்தில் உயிர்நாடிப் பிரச்னையான காவிரி பிரச்னையைத் தீர்க்கும் முயற்சியில் வி.பி.சிங்கின் பங்கு முக்கியமானது.

தமிழகத்தின் அரசியல் பேசுபொருள்களுள் ஒன்றான ஈழத்தமிழர் பிரச்னையில் வி.பி.சிங் எடுத்த முடிவு வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. தகவல் அறியும் சட்டம், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு அடிகோலியவர்களான அருணா ராய், நிகில் தேவ் ஆகியோர், வி.பி.சிங் மறைவை ஒட்டி விடுத்த இரங்கலுரையில், வி.பி.சிங் வரலாறு, மண்டல் பரிந்துரையை நடைமுறைப்படுத்த போராடியதோடு முடிந்துவிட வில்லை; ஏழை மக்களின் பக்கமும், நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அவர் போராடியது எங்களுக்கு ஊக்கம் அளித்தது; இந்த சட்டங்கள் நிறைவேற வழிவகுத்தது என்று நன்றியோடு நினைவு கூர்ந்தார்கள்.

தனது இறுதி நாள்வரை ஏழை மக்களின் உரிமைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குமாகவே தனது வாழ்வுப் பயணத்தை மேற்கொண்டவர். அரசியலில் நேர்மை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, மதசார்பின்மை, சமுக நீதி ஆகியவற்றில் உறுதியான செயல்பாடு என போராடியவர். லாலு பிரசாத், நிதிஸ் குமார், முலாயம்சிங், சரத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் போன்றோர் வி.பி.சிங்கால் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான், தன் வாழ் நாள் இறுதிவரையிலும், பெரியார் இயக்கத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் அளவற்ற அன்பைச் செலுத்தினார் வி.பி.சிங்.

எல்லாவற்றையும்விட முக்கியமாக, தமிழகத்தின் முதன்மையான போராட்டக்களமான சமூகநீதிப் போராட்டக் களத்தோடு தன்னைப் பிணைத்துக் கொண்டவர் வி.பி.சிங்.  இந்திய அரசியலில் மிக முக்கிய சீர்திருத்தத்தை அப்போது நிகழ்த்தினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார் வி.பி.சிங். அவரின் இந்த செயல், இந்தியாவின் அசமன்பாடுகளைத் தவிடுபொடியாக்கி, பல எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற உதவியது. இடஒதுக்கீடு, வி.பி.சிங் ஆட்சிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. தொடர்ச்சியாக அத்வானியின் கைது போன்ற சம்பவங்கள் வி.பி.சிங்கின் அரசியல் அஸ்திவாரத்தை அசைத்தன. பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

அவர் ஆட்சி செய்தது என்னவோ வெறும் 11 மாதங்கள்தான். அந்த 11 மாதங்களில், 'இந்திய அரசியலில் தன்னிகரற்றவர் வி.பி.சிங் ' என்ற பெரை அவருக்குப் பெற்றுத்தந்தது. அதன் பிறகு, பொது வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தவர், 2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். 2006-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். பிரதமர் பதவியைவிட்டு விலகும்போது, "பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை" என முழங்கிய வி.பி.சிங், கடைசி வரை அதுபோல வாழ்ந்தும் காட்டினார். ஏழைகளின் பகதூர், இடஒதுக்கீட்டின் நாயகன் எனக் கொண்டாடப்பட்ட வி.பி.சிங், புற்றுநோய் காரணமாக 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். அவரது பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. 

தலைப்புச்செய்திகள்