Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஞ்சலோக சிலை : சுவாமி சிலைகளை விற்க முயன்றவர்கள் கைது

ஜுன் 25, 2022 07:51

சென்னை-பஞ்சலோக சுவாமி சிலைகளை, 2 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியில், இரண்டு பஞ்சலோக சுவாமி சிலைகளை, மர்ம நபர்கள் விற்க முயற்சிப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார், சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல நடித்து, துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, விருத்தாச்சலம் அருகே, இருப்புக் குறிச்சியைச் சேர்ந்த மகிமைதாஸ் என்பவர், தன் வீட்டில், ஐந்து தலை நாகத்துடன், மாரியம்மன் மற்றும் பெருமாள் பஞ்சலோக சுவாமி சிலைகள் பதுக்கி இருப்பதை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர்.

இவரிடம், சிலை வேண்டும் என, மொபைல் போனில் பேசியபோது, 'சிலையின் விலை 2 கோடி ரூபாய். 1 ரூபாய் குறைத்து தந்தால் கூட விற்க மாட்டேன்' என, கறாராக கூறினார்.அந்த விலைக்கே வாங்கிக் கொள்வதாக போலீசார் கூறியதும், பணத்துடன், இருப்புக் குறிச்சியில் இருந்து அரசக்குழி செல்லும் சாலைக்கு வருமாறு கூறினார்.

இருதயசாமி வயல் என்ற இடத்தில் செல்லும்போது, போலீசார், சிலைகளுடன் மகிமைதாசை பிடித்து விசாரித்தனர்.அப்போது, 'இந்த சிலைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. விருத்தாச்சலம் பெரியகோட்டிமுளை பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து என்பவர், ஏதோ கோவிலில்திருடப்பட்ட சிலைகள் என கொடுத்தார்.

இரண்டு கோடி ரூபாய்க்கு விற்றால், கமிஷன் தருவதாக கூறினார். அதனால், சிலைகளை விற்க முயன்றேன் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஈரோடு மாவட்டம், கொடுமுடிபகுதியில் பதுங்கி இருந்த, பச்சமுத்து என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.இவரோ, 'அரியலுாரை சேர்ந்த முருகானந்தம் என்பவர், மிகவும் பழமை வாய்ந்த கோவில் சிலைகளை விற்றுத் தருமாறு கூறினார். 

நான், மகிமைதாசிடம் கொடுத்து விற்கச் சொன்னேன்' எனக் கூறியுள்ளார். இதையடுத்து, சிலைகளை மீட்ட போலீசார், பச்சமுத்து, 42, மகிமைதாஸ், 44, ஆகியோரை நேற்று கைது செய்தனர்; முருகானந்தத்தை தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்