Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4-ம் தேதி மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

ஜுலை 02, 2022 10:05

மும்பை:  மகாராஷ்டிராவில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகித்தார். சில நாட்களுக்கு முன்பு, சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு 38 சிவசேனா எம்எல்ஏக்களும், சில சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்தனர்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

பின்னர், பாஜகவும் சிவசேனா அதிருப்தி அணியும் இணைந்து புதிய அரசை அமைத்துள்ளன. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் ஜூலை 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்புக் கூட்டம் நாளை தொடங்குகிறது. இதில், பேரவையின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். 

பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடக்கிறது. நாளை (3-ம் தேதி) பேரவைத் தலைவர் தேர்வாகிறார். 4-ம் தேதி சட்டப்பேரவையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கு கோருகிறது.

பாஜக, சுயேச்சைகள் மற்றும் சில சிறிய கட்சிகளின் ஆதரவு இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டே அரசு எளிதாக வெற்றிபெறும்.
 

தலைப்புச்செய்திகள்