Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: எல்பின் நிறுவன முதலீட்டார்கள்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

ஜுலை 02, 2022 11:12

தஞ்சாவூர்: எல்பின் நிறுவனத்தலைவர் ராஜா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தஞ்சையில் இன்று  அந்நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எல்பின் நிறுவனத்தலைவர் ராஜாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.

எல்பின் நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மகாலட்சுமி மகாஹலில் நடைபெற்றது.  இதில் எல்பின் நிறுவனத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மகாதேவன் செய்திருந்தார். கூட்டத்தில் டாக்டர் விஜயகுமார், ஜீவா, ஜெயராதா, ஞான குணசேகர், கருப்பையா, ராஜேஸ்வரி குணாளன்,  உட்பட பலரும் தங்கள் ஆலோசனைகளை எடுத்து கூறினர். 

இதுகுறித்து அவர்கள் கூட்டதில் பேசியதாவது: எல்பின் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக பல லட்சம் குடும்பங்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளது. இதன் மூலம வருமானத்தை ஈட்டியவர்கள் தங்கள் வாழ்மை திறம்பட மேம்படுத்திக் கொண்டுள்ளனர்.மேலும் அறம் மக்கள் நலச்சங்கத்தின் மூலமாக கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை திறம்பட செய்து பலரது வாழ்க்கைக்கு வழிதுணையாக இருந்து வந்தது.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவால் நிறுவனத்தில் தொழில் முடங்கியது. இந்த சூழலை பயன்படுத்திய மோசடி பேர்வழிகளான சிவகாசி காக்கிவாடன்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற பட்டாசு ராசா, கோவையைச் சேர்ந்த அசோக் நாகேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து சிவகாசி ஜெயலட்சுமி, திருப்பூரைச் சேர்ந்த ஈபன் பொன்ராஜ், தஞ்சாவூரைச் சேர்ந்த சத்தியப் பிரியா மற்றும் சங்கர் என்ற சங்கர சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி மாயா, தஞ்சை அமுதா ஆகியோர் பல்வேறு வழிகளில் நிறுவனத்தை முடக்கி, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் போலியான வாக்குறுதிகளை கொடுத்து பணம் பறித்து வருகிறார்கள்.

அதாவது நமது நிறுவனத்தை சேர்ந்தவர்களின் மீது பொய் வழக்குகளை பதிவு செய்துவிட்டு, பின்பு அவர்களிடமே பணம் கேட்டு மிரட்டி வருகிறார்கள். பணம் தரவில்லையென்றால் உன்னை வெளியில் வரமுடியாத வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன் என்கிறார்கள். அதோடு கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டி வருகிறார்கள். இதற்கு காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக அவர்கள் பேசும்போதே தெரிகிறது. இவர்களில் சிவகாசி கோவிந்தராஜ் என்ற பட்டாசு ராசா, கோவை அசோக் நாகேந்திரன் ஆகிய இருவரின் மீது கோவை, சிவகாசி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

அதாவது, நமது நிறுவனர் ராஜா ஜாமீனில் வெளிவராதபடி குண்டாஸில் போட வைக்கும் அளவுக்கு எனக்கு காவல்துறையில் தகுந்த ஆட்கள் இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக கூறுகிறார்கள். அதோடு ஒவ்வொருவரும் கண்டிப்பாக ரூபாய் 20,000 முதல் 50,000 வரை கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம்... நம் வாழ்க்கைக்கு வழிதுணையாக எப்போதும் எல்பின் இருக்கும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு,

நமது  நிறுவனத்தலைவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு அபிடவிட் தாக்கல் செய்திருந்தார். அதில் எல்பின் நிறுவனம்,  துணை நிறுவனம் குறித்த அனைத்து தகவல்களையும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு உயர்நீதிமன்றம் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமனம் செய்து, இதுகுறித்து தகுந்த விசாரணை செய்து வாடிக்கையாளர்களுக்கான செட்டில்மெண்டை முடிக்க உத்தரவிட்டது.  இந்நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், எல்பின் இகாம் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

மற்ற நிறுவனங்களின் பெயர்கள் அதில் விடுபட்டிருந்தது. அதை காரணம் காட்டி, சட்டத்தில் இருக்கும் ஒரு ஓட்டையைப் பயன்படுத்தி நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்கள், பணியாளர்களின் பெயரிலும் அடுத்தடுத்து போலியான 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதாவது அந்த மோசடி பேர்வழிகளின் புகார்கள் நீதிபதிகளே நம்பும் அளவுக்கு உள்ளது என்பதுதான் இதில் வேடிக்கை. இதை வைத்து ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்துவிட்டனர். 

அதையடுத்து மேலும் ஒரு உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. அதில்,  EOW ADGP ஏடிஜிபி அசோக்குமார் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்படிருந்தது.  இந்நிலையில் திடீரென நமது நிறுவனத்தின் தலைவர் ராஜா  முதல் தகவல் அறிக்கையில் பெயரே சேர்க்கப்படாமல்., எந்த விசாரணையும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் நம்மைப் போன்ற பலரது வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது என கூட்டத்தில் பேசினர்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் எல்பின் நிறுவன வாடிக்கையாளர் மகாதேவன் கூறும்போது,  எங்களுக்கு ராஜா சார் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அவர் உடனடியாக விடுதலையாகி வந்தால் மட்டும்தான் எங்களது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அதனால் மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடியாக எங்கள் நிறுவன தலைவர் ராஜா சாரை விடுதலை செய்ய ஆவணம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அதோடு இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் மோசடி பேர்வழிகளான சிவகாசி காக்கிவாடன்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற பட்டாசு ராசா, கோவையைச் சேர்ந்த அசோக் ஆகியோருடன் சேர்ந்து சிவகாசி ஜெயலட்சுமி, திருப்பூரைச் சேர்ந்த ஈபன் பொன்ராஜ், தஞ்சாவூரைச் சேர்ந்த சத்தியப் பிரியா, சங்கர் என்ற சங்கர சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி மாயா, தஞ்சை அமுதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து கடந்த ஜூன் 20ம் தேதி தஞ்சை மாநகர காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

மேலும் டாக்டர் விஜயகுமார் கூறும்போது,  பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை உயர்த்தியர் எங்கள் எல்.பின் நிறுவனர் ராஜா. ஆனால் தற்போது சூழ்ச்சிக்காரர்களின் பிடியில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். இது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை கொடுக்கிறது. அவர் வெளியில் வந்தால் மட்டுமே எங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும். வேறு யாராலும், எந்த நிலையிலும் இதற்கு தீர்வு கிடைக்காது. அதற்கு முதல்வர் அவர்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்