Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 தெலங்கானாவில் கனமழை  காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஜுலை 10, 2022 06:33

ஹைதராபாத்: கனமழை காரணமாக தெலங்கானாவில் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜூலை 11, 12, 13 ஆகிய நாட்களில் பள்ளி, கல்லூரிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஆலோசனை: தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றதன் காரணமாகவும், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாகவும் நாடு முழுவதும் பரவலாக பல்வேறு மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தெலங்கானா மாநிலத்தில் ஜெயசங்கர் பூபல்பள்ளி, நிசாம்பாத், ராஜண்ணா சிர்கிலா மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருமாறு முதல்வர் சந்திரசேகர ராவ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் மழை, வெள்ளம் நிலவரம் குறித்து முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்திற்குப் பின்னர் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இன்று காலையில் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில், வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

ரெட் அலர்ட்: தெலங்கானாவில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்