Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலை - தெரு விளக்கு , குடிநீர் என அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் பொது மக்கள் ! 

ஜுலை 13, 2022 06:25

காஞ்சிபுரம், ஜூன் 30 : சாலை, தெருவிளக்கு, குடிநீர் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை என, காஞ்சிபுரம் மாநகராட்சியின் 10வது வார்டுக்கு உட்பட்ட வேதாச்சலம் நகர், முல்லை நகர் மக்கள் புலம்புகின்றனர். 

கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சியை ‘அலங்கரிக்கப்போவது’ யார் அந்த  முதன் பெண் மேயர் என, பல பத்திரிக்கைகளிலும் செய்திகள் தொடர்ந்து வந்தது. காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி யுவராஜியும் தேர்வு செய்யப்பட்டார். 6 மாதங்கள் ஆகியும் காஞ்சிபுரம் மாநகராட்சி இன்னும் துாய்மை பெறாமல் உள்ளன.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் வடமேற்கில் அமைந்துள்ளது 10வது வார்டு. இங்கு வேதாச்சலம் நகர், முல்லை நகர் என, இரண்டு குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு மக்களுக்காக நுழைவு வாயில் வழியாக 40 அடி சாலையும் குறுக்குத் தெருவில் 30 அடி சாலையும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த சாலைகளை மக்கள் இதுவரையிலும் ‘ஒத்தையடி’ பாதையாகத் தான் பயன்படுத்தி வருகின்றனர், காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த சாலைகளுக்கு சாதாரண ‘மண்ணை’கூட கொட்டியதில்லை என, அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள அரிசி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை மேற்கண்ட சாலையில் தான் இரவோடு இரவாக கொட்டி விட்டு செல்கின்றனர். இதை தட்டிக் கேட்க முடியாத நிலைக்கு வேதாச்சலம் -  முல்லை  நகர் மக்கள் தள்ளப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் கழிவுப் பொருட்களுடன் சாலை சேரும் - சகதியுமாக மாறிவிடுகிறது. பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். 

 இது ஒரு பக்கம் இருக்க இந்த குடியிருப்புகளுக்கு தெரு விளக்குகளும் இது வரை பொருத்தப்படவில்லை. இப்பகுதி மக்கள் பல முறை காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எதுவும் இல்லை. 

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்களில் பொதுமக்களின் தேவைக்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பாற்கடல் நீரும் – காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையின் குறுக்கே செல்லும் பாலாற்றுக் குடிநீரும் தான் வினியோகிக்கப்ட்டு வருகிறது. ஆனால், மேற்கண்ட எந்த குடிநீரும் நாங்கள் பார்த்ததே இல்லை என்கின்றனர் வேதாச்சலம் நகர் மக்களும் முல்லை நகர் மக்களும்.
எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி 10வது வார்டில் உள்ள எங்கள் பகுதியை மாநகராட்சி மேயரும், மாநகராடசி அதிகாரியும் ஒரு முறை நேரில் வந்து பார்வையிட்டு மேற்கண்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் பகுதியை பக்கதில் உள்ள ஊராட்சியுடன் இணைத்துவிட ஆவண செ்ய்ய வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்