Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேரிடர் தொடர்பான தகவல்களை அறிய செல்போன் செயலி கலெக்டர் தகவல்

மே 09, 2019 09:13

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், பேரிடர் அபாயத்தினை குறைக்கவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் ‘ TN SM-A-RT ’ என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளில் இருந்து மீளவும், அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ளவும் இச்செயலி பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த செயலியை பொதுமக்கள் தங்கள் செல்போனில் உள்ள ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இச்செயலி மூலம் பேரிடர் குறித்த தகவல்கள், முன் எச்சரிக்கைகள், மழை அளவு ஆகியவற்றை அறிய இயலும்.

இச்செயலி தனிப்பட்ட எச்சரிக்கை ஒலியமைப்பு முறையை கொண்டது. இதனால் சுனாமி, புயல் போன்ற பேரிடர்களின் போது செல்போன் அமைதி நிலையில் (சைலண்ட் மோட்) கூட எச்சரிக்கை ஒலியுடன் செய்தியை பெற முடியும். இந்த எச்சரிக்கை ஒலி செய்தியை பயனாளர்கள் பார்த்த பின்பு தான் நிற்கும். 

இந்த செயலி மூலம் கட்டுப்பாட்டு அறையை உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். மேலும், இதனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பேரிடர் விழிப்பறிக்கைகள், வானிலை முன் அறிவிப்பு, பதிவு செய்யப்பட்ட மழையளவு, செயற்கைகோள் புகைப்படங்கள், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளின் வரைப்படங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

இச்செயலியை அனைத்து துறை அரசு அலுவலர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், சேதமடைந்த வீடு, கால்நடை, பயிர் சேதம் ஆகியவற்றின் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது. இச்செயலியினை அனைவரும் பதிவிறக்கம் செய்து இயற்கை பேரிடர்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்