Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல் கொள்முதல் தனியார் வசமாகாது: அமைச்சர் தகவல்

ஜுலை 14, 2022 08:58

தஞ்சாவூர் : "நெல் கொள்முதல் தனியார் வசம் ஒப்படைக்கப்படும், என்ற தகவல் தவறானது, " என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

தஞ்சாவூர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உணவு பொருட்கள் வழங்கல் துறை சார்பில், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்த பின், அமைச்சர் சக்கரபாணி, நிருபர்களிடம் கூறியதாவது;

மேட்டூர் அணையில் இருந்து மே 24ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால், குறுவை அறுவடை இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரம் துவங்கி விடும். இந்நிலையில், மத்திய அரசு, செப்டம்பர் 1ம் தேதியே கொள்முதலை துவங்க வேண்டும், ஆதார விலையை அதற்குள் அறிவிக்க வேண்டும், என முதல்வர், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, மத்திய உணவுத்துறை அமைச்சர் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார். எனவே, இந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதலே குறுவை கொள்முதல் பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் பாதிக்கப்படுவதை தடுக்க, தமிழகத்தில் 5 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. 

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் தலா 2, மயிலாடுதுறை, கடலுார், நாகை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தேனி மாவட்டங்ளில் தலா ஒரு இடத்தில் என 11 இடங்களில், அரசு மற்றும் தனியார் ஒப்பந்த அடிப்படையில், நாள்தோறும் 500 மெட்ரிக் டன் அரவை செய்யும் திட்டத்தில், மார்டன் ரைஸ் மில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2021 - 2022ம் ஆண்டில் இதுவரை தமிழகத்தில், 40.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. 2022 - 23ம் ஆண்டில் அதிகளவில் கொள்முதல் செய்யப்படும்.தி.மு.க., ஆட்சி வந்த 14 மாதங்களில், 12.54 லட்சம் புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 511 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ரோட்டில் எங்கேயும் நெல் கொட்டி வைக்கப்படவில்லை. பாமயிலுக்கு பதிலாக தேங்காய், கடலை எண்ணெய்களை ரேஷன் கடைகளில் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். கொள்முதல் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்பது தவறான கருத்து. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்