Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசு திட்டங்கள் மக்களை சேர வேண்டும்: மத்திய இணை அமைச்சர் பேட்டி

ஜுலை 15, 2022 07:49

கோவை: 'அனைத்து நலத்திட்டங்களும் மக்களை சென்றடைய வேண்டும் என்பது தான் மத்திய அரசின் எண்ணம்,'' என, கோவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன் ராவ் தெரிவித்தார்.

கோவையில் லோக்சபா தொகுதி பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன் ராவ் தலைமை வகித்தார். இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. 

கோவை மாநகரில் உள்ள சாலை பிரச்னை, திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை திட்ட பணிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

சொத்து வரி உயர்த்தப்பட்டது குறித்தும் கூறப்பட்டது. விமானநிலைய விரிவாக்கம் என்பது இந்த நகருக்கு மிகவும் தேவையானது. இதில் ஒரு சில விஷயங்கள் மத்திய அரசையும், மாநில அரசையும் சார்ந்துள்ளன. அனைத்து நலத்திட்டங்களும் மக்களை சென்றடைய வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம்.

மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலதிட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும், மாநில அரசு சரிவர செய்வது இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய, மாவட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திட்டத்தின் பயனாளிகளை நேரடியாக சந்தித்து கருத்துக்கள் பெறப்பட உள்ளன.

பெட்ரோல், டீசல் விலையில், ஏற்கனவே மத்திய அரசால் இருமுறை வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு 'வாட்' வரியை குறைத்தது; ஆனால் மாநில அரசுகள் குறைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்