Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

20% ஆவின் தயிர், நெய் விலைகள் உயர்த்தப்படுவது நியாயமற்றது

ஜுலை 21, 2022 01:17

சென்னை: ஆவின் தயிர், நெய் விலைகள் 20% உயர்த்தப்படுவது நியாயமற்றது, அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது; ஏற்றுக் கொள்ள முடியாதது.

கடந்த மார்ச் மாதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன. அதன்பின் 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் மீண்டும் ஒரு விலை உயர்வை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தயிருக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது தான் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 5% மட்டும் வரி விதிக்கப்பட்ட நிலையில், 20% விலையை உயர்த்துவதும், நெய் மீதான வரி உயர்த்தப்படாத நிலையில் அதன் விலையையும் அரசு உயர்த்துவதும் எந்த வகையில் நியாயம்?

குஜராத்தின் அமுல், கர்நாடகத்தின் நந்தினி போன்ற பால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு பெறப்பட்டுள்ள நிலையில், அதே போல் ஆவினுக்கும் பெற வேண்டுமே தவிர விலையை உயர்த்தக்கூடாது. விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்