Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை.. ஆக.16 வரை நீட்டிப்பு - சென்னை பல்கலை அறிவிப்பு

ஜுலை 30, 2022 05:37

சென்னை : தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் அரசு கலைக்கல்லூரிகளில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 5-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானாது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைதாள் நகலை பெறுவதற்குரிய அறிவிப்பை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டது.

கடந்த 22-ம் தேதி, சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் மட்டுமல்லாது கலை அறிவியல் படிப்புகளிலும் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி, விண்ணப்பிக்கத் தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கடந்தாண்டை காட்டிலும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ளனர். இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவர்கள் மத்தியில் சேர்க்கைக்கான ஆர்வம் அதிகரித்துள்ளதால், நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி தேவையான நாட்களுக்கு வகுப்புகளுக்கு வருகை தரும் பட்சத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவாார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்