Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

ஆகஸ்டு 02, 2022 07:14

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை நீர்மட்டம் நேற்று மாலை 4:00 மணிக்கு 68.50 அடியாக (மொத்த உயரம் 71 அடி) உயர்ந்ததையடுத்து 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.இந்த அணைக்கு பெரியாறு அணை, போடி கொட்டக்குடி ஆறு, தேனி முல்லை ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கும்.

பெரியாறு அணையில் திறக்கப்படும் நீர் தொடர்ந்து வைகை அணைக்கு வருவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.ஜூன் 2ல் அணை நீர்மட்டம் 62.50 அடியாக இருந்த போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் ஜூலை 2ல் 52.59 அடியாக குறைந்தது. ஜூலை 21ல் வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

ஜூலை 30ல் நீர்மட்டம் 66.01 அடியானதால் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.நேற்று மாலை 4:00 மணிக்கு நீர்மட்டம் 68.50 அடியானது. இதனைத் தொடர்ந்து அணையில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து தற்போது குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2300 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் 69 அடியாகும் போது 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். நீர்வரத்தை கருத்தில் கொண்டு அணையில் எந்த நேரத்திலும் நீர் திறக்க வாய்ப்புள்ளதால் வைகை ஆற்றின் கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்திவுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்