Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

14-வது ஊதிய ஒப்பந்தம்: போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை

ஆகஸ்டு 03, 2022 12:06

சென்னை, அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தப்பட்டு, ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி, 13-வது ஊதிய ஒப்பந்தம், 2019 ஆகஸ்ட் மாதத்தில் முடிந்தது. 14-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த மாதம் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா தொற்று பாதிப்பு, சட்டசபை தேர்தல், அமைச்சர் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், ஒப்பந்த பேச்சு முழுவீச்சில் நடைபெறவில்லை. 

ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கோரி, இன்று (ஆகஸ்ட்-3) ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து, வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், பணிக்கு வருமாறு தொழிலாளர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி எந்த விடுப்புகள் தரப்பட மாட்டாது எனவும், ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

 பணிக்கு வரவில்லையெனில் சம்பளம் பிடிக்கப்படும் எனவும், பணியாளர்கள் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் இன்று நடைபெற உள்ளது. 

இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் உடனடியாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்