Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் ரெட் அலர்ட்

ஆகஸ்டு 03, 2022 01:48

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை, மத்திய தெற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் சேர்ந்து கொண்டதால் கேரளா முழுவதும் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பை தொடர்ந்து கேரள மாநில அரசு முன்னேற்பாடு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. 

மேலும் மழை அதிகம் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். இதையும் படியுங்கள்: கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- மாநிலம் முழுவதும் 95 நிவாரண முகாம்கள் திறப்பு கேரளாவில் கடந்த 2 நாட்களில் பெய்த மழைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் பலியானார்கள். 

பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த பென்சன்பாண்டி என்பவர் தனது 2 மகள்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். வெண்ணிக்குளம் பகுதியில் சென்றபோது கார் சாலையோர ஓடையில் கவிழ்ந்தது. இதில் 3 பேரும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்களை தீயணைப்பு படையினர் பிணமாக மீட்டனர். இதுபோல இடுக்கி மற்றும் கும்பாவுருட்டு அணை பகுதியிலும் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் என இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். இதுபோல மாநிலம் முழுவதும் மழைக்கு 55 வீடுகள் சேதமடைந்துள்ளது. 

இதில் 5 வீடுகள் முழுமையாகவும், 500 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர். இதையும் படியுங்கள்: மத்தியப் பிரதேசத்தில் சாலை விபத்து- பெண்கள் உள்பட 7 பேர் பலி வீடுகளை இழந்தவர்கள் அனைவரும் மழை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன. கேரளாவில் கடலோர பகுதிகளிலும் சூறைக்காற்று வீசி வருகிறது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 

இதனால் கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் கரை திரும்பி வருகிறார்கள். குமரி மாவட்ட எல்லையில் உள்ள விழிஞம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீன்பிடி படகு நேற்று கடல் சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் கடலில் விழுந்தனர். 

அவர்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டனர். கேரளாவில் மழை வெள்ள சேதங்களை தடுக்க மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:- கேரளாவிற்கு 4 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மற்றும் திருச்சூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 4 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு படையினர் வர உள்ளனர். அவர்களும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள், என்றார்.

தலைப்புச்செய்திகள்