Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாலிபர்களிடம் நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் :  வழக்கை கையிலெடுத்தது என்.ஐ.ஏ. !!

ஆகஸ்டு 04, 2022 01:18

சேலம் மாவட்டத்தில் இரு வாலிபர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ கையிலெடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளது.

வாகன தணிக்கை : சேலம் மாவட்டம் புளியம்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் போலீசார் நடத்திய வாகன தணிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இரு இளைஞர்களிடம் நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து துப்பாக்கி தயாரிக்க பயன்படும் உதிரிகள், தோட்டாக்கள் மற்றும் வெடி மருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.

ஆயுதச்சட்டம் : அதனைத் தொடர்ந்து கச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான நவீன் சக்ரவர்த்தி மற்றும் செவாபேட்டை பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ் ஆகிய இரு இளைஞர்கள் மீது ஆயுத சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஓமலூர் போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் விடுதலை புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, யூ-டியூப் மூலம் துப்பாக்கிகள் செய்ய கற்றுக்கொண்டதும், அந்த இயக்கத்தைப் போல ஒரு இயக்கத்தை தொடங்கி கல் குவாரிகளுக்காக மலைகள் போன்ற இயற்கை வளங்களை அழிக்கும் நபர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை கையிலெடுக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

குறிப்பாக கல் குவாரிகளில் இருந்து கற்களை ஏற்றி வரும் லாரிகளை வெடி வைத்து தகர்க்க துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களை தயார் செய்துகொண்டிருந்ததும் தெரியவந்தது. விசாரணையின்போது அவ்விருவரும் அளித்த தகவலின் அடிப்படையில் சேலம் மாவட்டம் கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்த கபிலர் என்ற மற்றொரு இளைஞரையும் போலீசார் கைது செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர். 

என்.ஐ.ஏ., இந்நிலையில் ஆயுதங்களை தயார் செய்தது சட்ட விரோத அமைப்புகளுக்கு கொடுக்கவா? அல்லது விற்பனைக்காகவா? துப்பாக்கிகள் தயாரிக்கும் அளவிற்கு உதிரி பாகங்கள், வெடி மருந்து உள்ளிட்டவை பெற நிதி உதவி செய்தது யார்? மற்றும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் தொடர்பில் இவர்கள் உள்ளனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு முழுமையான பதில் கிட்டாத நிலையில் தற்பொழுது, இவ்வழக்கை என்.ஐ.ஏ. கையிலெடுத்துள்ளது.

நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளது. குற்றத்தின் தீவிரம் கருதியும், நாட்டின் பாதுகாப்பு கருதியும் என்.ஐ.ஏ, இந்த வழக்கை கையில் எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்