Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவில் முன் ஈ.வெ.ரா., சிலை இருப்பது நியாயமா?

ஆகஸ்டு 06, 2022 10:45

சென்னை : ஹிந்து முன்னணி நடத்திய, ஹிந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணத்தின் நிறைவு விழா, சென்னை மதுரவாயலில் சமீபத்தில் நடைபெற்றது.  அப்போது பேசிய, சினிமா ஸ்டன்ட் மாஸ்டரும், ஹிந்து முன்னணி கலை, இலக்கியப் பிரிவு செயலருமான கனல் கண்ணன், 'ஸ்ரீ ரங்கநாதரை வழிபட ஒரு லட்சம் பேர் வருகின்றனர். கோவிலின் எதிரே, கடவுளே இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அது என்று உடைக்கப்படுகிறதோ, அன்று தான் ஹிந்துக்களின் எழுச்சி நாள்' என்றார்.இதற்கு தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கனல் கண்ணனை கைது செய்யக் கோரி, தி.மு.க., ஆதரவாளர்கள் புகார் அளித்துள்ளனர். அவரை கைது செய்ய, காவல் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கனல் கண்ணனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'ஹிந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் தி.மு.க.,வினர், அதை கருத்து சுதந்திரம் என்கின்றனர். 'அதே கருத்து சுதந்திரம், கனல் கண்ணனுக்கும் உண்டு. ஸ்ரீரங்கம் கோவில் எதிரே, ஈ.வெ.ரா., சிலை இருக்க வேண்டுமா என்று, அங்கு வரும் பக்தர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால் வேண்டாம் என்று தான் சொல்வர். பொது இடங்களில் அவரது சிலையை வைத்துக் கொள்ளட்டும்' என்றார்.

பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா, 'ஈ.வெ.ரா., சிலைக்கு கீழே, கடவுள் இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.'கோவிலுக்கு முன்பு இப்படிப்பட்ட வாசகங்களுடன் ஈ.வெ.ரா., சிலை இருப்பது, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் திட்டமிட்ட செயல்.'எனவே, இந்த வாசகங்களை நீக்க வேண்டும். கனல் கண்ணனின் கருத்துரிமை காக்கப்பட வேண்டும்' என கூறியுள்ளார்.எழுத்தாளரும், ஓய்வு பெற்ற மத்திய அரசு செயலருமான பி.அனந்தகிருஷ்ணன் தன் 'பேஸ்புக்' பக்கத்தில், 'கடவுள் ஆதரவாளர்கள், ஈ.வெ.ரா.,வின் கடவுள் மறுப்பு சிலைகளுக்கு நேர் எதிரில், கடவுள்களின் சிலைகளை வைக்க உரிமை கோரி போராட வேண்டும்.

'அச்சிலைகளின் கீழே, 'கடவுளை நம்பு; மனிதனுக்கு உதவு; கடவுள் இருக்கிறார்; கடவுளை மறந்தவன் முட்டாள்; கடவுளை பரப்பாதவன் அயோக்கியன்; கடவுளை வணங்காதவன் காட்டுமிராண்டி' என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற வேண்டும். 'கருத்து சுதந்திரத்திற்காக போராட வேண்டுமே தவிர, மற்றவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்காக போராடக் கூடாது' என குறிப்பிட்டு உள்ளார்.ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், 'ஈ.வெ.ரா., சிலைகளை நாங்கள் எதிர்க்கவில்லை.

கடவுள் நம்பிக்கையாளர்களை இழிவுப்படுத்தும் வாசகங்களுடன் கோவில்கள் முன்பு, ஈ.வெ.ரா., சிலைகள் இருப்பதை தான் எதிர்க்கிறோம். 'கோவில்கள் முன்பு வைப்பது போல, மற்ற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் முன்பு, ஈ.வெ.ரா., சிலையை வைத்து விட முடியுமா? கனல் கண்ணன் பேசியதில் எந்தத் தவறும் இல்லை' என்றார்.கனல் கண்ணனின் பேச்சு ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், மறுபக்கம், கடவுளின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் மனதை புண்படுத்தும் வாசகங்களுடன், கோவில்கள் முன்பு, ஈ.வெ.ரா., சிலைகள் இருப்பது நியாயமா என்ற விவாதத்தை, தமிழகம் முழுதும் உருவாக்கியுள்ளது.

தலைப்புச்செய்திகள்