Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண் தாசில்தார்  மாலை வரை கோர்ட்டில் அமர உத்தரவு

ஆகஸ்டு 06, 2022 10:48

சென்னை :  திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா, கடலடி கிராமத்தில், பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, முருகன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ல் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 12 வாரங்களில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்கும்படி, கலசப்பாக்கம் தாசில்தாருக்கு உத்தரவிட்டது.

2017 டிசம்பரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதை அமல்படுத்தவில்லை என, உயர் நீதிமன்றத்தில், 2018ல் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.நான்கு வாரங்களில் உத்தரவை அமல்படுத்துவதாக, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அமல்படுத்தவில்லை.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தாசில்தாரை குற்றவாளி என அறிவித்து, தண்டனை விபரத்தை அறிவிக்க, நீதிமன்றத்தில் ஆஜராக, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தாசில்தார் லலிதா, நீதிபதிகள் முன் ஆஜரானார்.தாசில்தார் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''ஆக்கிரமிப்புகளை மூன்று வாரங்களில் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்கிறோம். சிறை தண்டனை விதித்தால், சமூகத்தில் அவருக்கும், குடும்பத்தினருக்கும் ஏற்படும் நிலையை, நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.''சிறிய அளவில் வேண்டுமானால் தண்டனை கொடுங்கள்,'' என்றார்.

தாசில்தார் லலிதாவும், கண்ணீர் மல்க நின்றார். இதையடுத்து, பெண் தாசில்தாருக்கு சிறை தண்டனை விதிக்காமல், நீதிமன்ற நேரம் முடியும் வரை, அங்கேயே இருக்கும்படி, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. நீதிமன்ற அறைக்கு வெளியில் உட்கார, அவருக்கு இருக்கை வழங்கப்பட்டது. மூன்று வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்யவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதற்கு, பெரும்பாலும் ஊழல் தான் முக்கிய காரணம் எனவும், முதல் பெஞ்ச் கண்டனம் தெரிவித்தது.

தலைப்புச்செய்திகள்