Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

102 அடியை எட்டியது பவானிசாகர் அணை

ஆகஸ்டு 06, 2022 01:14

ஈரோடு:  ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் 105 அடி வரை, 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 28-ம் தேதி, 100 அடியை எட்டியது. இந்நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், அணைக்கான நீர் வரத்து அதிகரித்து, நேற்று காலை அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அணை பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பவானிசாகர் அணையில் இருந்து நேற்று காலை முதல் உபரி நீர் திறக்கப்பட்டது.

நேற்று (வெள்ளி) காலை விநாடிக்கு 7000 கன அடி என்ற அளவில் உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. கோவை, நீலகிரியில் பெய்யும் கன மழையால், கோவை பில்லூர் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் பவானிசாகருக்கு வந்து சேர்ந்ததால், நேற்று நள்ளிரவில் நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்வரத்து முழுவதும் பவானி ஆற்றில் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணைக்கு 25,768 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து, 25,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை: பவானி ஆற்றில் 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில், வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பவானி ஆற்றில் குளிக்க, மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். காவிரி மற்றும் பவானியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், ஈரோடு மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 2000-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி நீரும், பவானி ஆற்றில் 25 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரு ஆறுகளும் ஒன்று சேரும் பவானி நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இரு ஆறுகளும் சங்கமிக்கும் பவனி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில் தீவு போல் காட்சியளிக்கிறது. பவானியில் இரு ஆறுகளின் கரையை ஒட்டிய 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனால், அங்கிருந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள கந்தன் பட்டறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை, ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி நேற்றிரவு சந்தித்துப் பேசினார். அப்போது, சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஆட்சியரின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், முகாமில் தங்கியுள்ள ஜெயசுதா என்பவரிடம் பேசினார். முகாமில் போதுமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா என்பது குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

தலைப்புச்செய்திகள்