Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நமீபியாவிலிருந்து இந்தியா வரும் சிவிங்கிப்புலி.. இரைக்காக 250 புள்ளிமான்கள் மத்தியப்பிரதேசத்தில் அடைப்பு

ஆகஸ்டு 13, 2022 06:57

இந்தியா : இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை சிவிங்கிப்புலிகள் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள 'சாஃப்ட் ரிலீஸ் என்க்ளோஷரில்' வைக்கப்படும்

இந்தியாவில் காட்டுப்பூனை இனங்களில் ஒன்றான சிவிங்கிப்புலியின் கடைசி இறப்பு 1947 இல் பதிவிடப்பட்டது. 1952 இல் இருந்து இந்தியாவில் ஒரு சிவிங்கிப்புலி கூட இல்லாத நிலையில் 'இந்தியாவில் ஆப்பிரிக்க சிவிங்கிப்புலி அறிமுகம் திட்டம்' 2009 இல் உருவாக்கப்பட்டது.

அதன்படி ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றனர். 2009 ஆம் ஆண்டு பன்னா தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. விசாலமான காடுகள் கொண்ட மத்திய பிரதேசம் ஒரு காலத்தில் சிவிங்கிப்புலிகளின் தாயகமாகத் திகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது ஆப்பிரிக்க நாடான நமீபியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் இருந்து சுமார் 3000 முதல் 4000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் சில சிவிங்கிப்புலிகளை வாங்கி மத்தியப் பிரதேசத்தின் குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்குக் (KNP) கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.நமீபியா மட்டுமல்லாமல் மற்ற ஆப்பிரிக்க நாடுகளுடனும், தனியார் விலங்கியலாளர்களிடமும் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவந்து குனோ-பால்பூர் தேசிய பூங்காவில் சிவிங்கிப்புலிகளை பழக்கப்படுத்துவதற்காக 250 க்கும் மேற்பட்ட சிட்டல்களை (புள்ளி மான்கள் அல்லது அச்சு மான்கள்) 'மென்மையான வெளியீட்டு அடைப்பில்' வைத்துள்ளோம்," என்று மத்திய பிரதேச முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனவிலங்கு) ஜே எஸ் சௌஹான் தெரிவித்தார்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள பெஞ்ச் புலிகள் காப்பகம் மற்றும் நரசிங்கரின் வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து சிட்டல் மான்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சிவிங்கிப்புலி வேட்டையாடுவதற்காக மேலும் 500 சிட்டல் மான்கள் அடைப்பில் வைக்கப்படும் என்றார். இந்த பாலூட்டிகள் ஆப்பிரிக்காவின் தொலைதூரத்தில் இருந்து இந்தியாவிற்கு வருகின்றன என்பதாலும், நீண்ட பயணத்திற்குப் பிறகு மன அழுத்தம் மற்றும் சோர்வு ஏற்படும் என்பதாலும் சிவிங்கிப்புலிகளுக்கு நல்ல சூழலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

"காடுகளில் விடப்படுவதற்கு முன் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை சிவிங்கிப்புலிகள் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள 'சாஃப்ட் ரிலீஸ் என்க்ளோஷரில்' வைக்கப்படும்," என்று சௌஹான் கூறினார்.

பெரும்பாலான சிவிங்கிப்புலிகள் குனோ தேசியப்பூங்காவிற்கு நன்கொடையாக வழங்கப்படுவதாகக் கூறினார். ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் சிவிங்கிப்புலிகள் இந்தியாவை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு முதல் ஐந்து பெண் சிவிங்கிப்புலிகள் உட்பட 12 சிவிங்கிப்புலிகள் இந்தியாவிற்கு விமானம் மூலம் அனுப்பப்படுகிறது. தடுப்பூசி மற்றும் ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் தொய்வடைந்த சிவிங்கிப்புலி பரிமாற்றம் இப்போது தொடர்கிறது.
 

தலைப்புச்செய்திகள்