Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இனி அரசு மானியம், பலன்களை பெற ஆதார் கட்டாயம்..UIDAI சுற்றறிக்கை

ஆகஸ்டு 16, 2022 01:57

நிரந்தர ஆதார் வரும்வரை, அந்த நபருக்கு ஆதார் பதிவு அடையாள (EID) எண் ஒதுக்கப்படும், அந்த ஸ்லிப்புடன் மாற்று அடையாள அட்டையைப் பயன்படுத்தி அவர் அரசின் பலன்கள், மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறலாம்

இனி, அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற, ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கடந்த வாரம் அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

UIDAI என்பது ஆதார் சட்டம் 2016 இன் விதிகளைப் பின்பற்றி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இந்திய அரசாங்கத்தால் 12 ஜூலை 2016 அன்று நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஆணையமாகும்.

இந்தியாவில் வாழும் குடிமக்களுக்கு தேவையான அரசின் மானியங்கள், சேவைகளைப் பெற ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய அடையாள அட்டையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. 12 இலக்க எண்கொண்ட ஆதார் எண் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. அரசின் திட்டங்கள் மூலம் வரும் நேரடி வங்கி பரிமாற்றங்களுக்கு ஆதார் அவசியமானதாகக் கேட்கப்படுகிறது.

ஆதார் இன்னும் ஒதுக்கப்படாத நபர்கள் அதற்கு பதில் அரசின் மற்ற அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க ஆதார் சட்டத்தின் 7வது பிரிவின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன்மூலம் அவர், அரசின் நன்மைகள், மானியங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று இருந்தது.

ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 99 சதவீதத்திற்கும் அதிகமான வயது வந்தோருக்கு தற்போது ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. அதனால் சலுகைகளை பெற கட்டாயம் ஆதார் அட்டையை பயன்படுத்த வேண்டும். அப்படி ஆதார் அட்டை வழங்கப்படாத பட்சத்தில், ஆதார் அட்டைக்கு பதிவு செய்து அந்த எண்ணைப் பயன்படுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளது.

‘நிரந்தர ஆதார் வரும்வரை, அந்த நபருக்கு ஆதார் பதிவு அடையாள (EID) எண் ஒதுக்கப்படும், அந்த ஸ்லிப்புடன் மாற்று அடையாள அட்டையைப் பயன்படுத்தி அவர் அரசின் பலன்கள், மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறலாம்,’ என்று UIDAI சுற்றறிக்கை குறிப்பிடுகிறது.

அரசின் சேவைகளைப் பெறும் வழிகளின் தரத்தை ஆதார் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. UIDAI இன் சமீபத்திய தரவுகளின்படி, 95.74 லட்சம் ஆதார் எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது 2022 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் வயது வந்தவர்களின் கணிக்கப்பட்ட மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 101 சதவீதமாகும். அரசாங்கத்தின் நலத்திலங்களில் ஏற்படும் குறை, கசிவுகளைத் தடுக்க ஆதார் ஒரு முக்கிய கருவியாகக் கருதப்படுகிறது.

மெய்நிகர் அடையாள எண்  (VID)

மக்களுக்கு ஆதார் குறித்த பாதுகாப்பு மற்றும் தனியுரிமை உணர்வை வழங்க, ஆதார் எண் வைத்திருப்பவரின் ஆதார் எண்ணுடன் அவ்வப்போது மாற்றக்கூடிய 16 இலக்க ரேண்டம் மெய்நிகர் அடையாள எண்ணைப் பெறும் வசதியை அளித்துவந்தது. ஆதார் எண் வைத்திருப்பவர் ஆன்லைன் அங்கீகாரம் அல்லது இ-கேஒய்சிக்கு ஆதார் எண்ணுக்குப் பதிலாக விஐடியைப் பயன்படுத்தலாம். இந்த வசதியும் ஆகஸ்ட் 11 சுட்டறிக்கைபடி விருப்பத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.

அரசின் சான்றிதழ்களுக்கும் ஆதார்:

அரசின் பலன்களைப் பெற தகுதிச் சான்றிதழ் தேவைப்படும்.கல்வி, மற்றும் பிற பணி சார்ந்த காரணங்களுக்காகவும் அரசிடம் இருந்து சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அந்த சான்றிதழ்களுக்கும் இனி ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்