Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை பஸ்போர்ட் திட்டம் ரத்தாக குப்பை நாற்றம் காரணம்!

ஆகஸ்டு 25, 2022 09:29

கோவை: நாட்டின் முக்கியமான இரண்டாம் நிலை நகரங்களில், பாரத்மாலா திட்டத்தில் பஸ்போர்ட்கள் அமைக்கப்படும் என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த, 2017ல் பார்லிமென்ட்டில் அறிவித்தார். விமான நிலையத்துக்கு இணையான வசதிகளை கொண்ட, சர்வதேச தரத்திலான பஸ் நிலையங்கள்தான் 'பஸ்போர்ட்' என்று விளக்கமும் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில், இதற்கு கோவை மற்றும் சேலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக, அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.கோவையில் வெள்ளலுார் குப்பைக்கிடங்குக்கு அருகே தற்போது ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டும் இடமும் தேர்வு செய்து அனுப்பப்பட்டது.

அறிவிப்பு வெளியாகி, ஓராண்டுக்கு மேலாகியும் இதற்கான பணிகள் துவங்கவில்லை. அதன்பின், பஸ்போர்ட் என்பது ஒருங்கிணைந்த பஸ் நிலையமாக மாற்றப்பட்டது. கடந்த, 2014ல் மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில் அன்றைய முதல்வர் ஜெ., அறிவித்த திட்டம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசு அறிவித்த பஸ்போர்ட் திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மொத்தம், 61 ஏக்கர் பரப்பில் ரூ.168 கோடி மதிப்பில், மாநில அரசு மற்றும் மாநகராட்சி நிதியிலேயே ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டும் பணி துவங்கியது. ரூ.40 கோடி மதிப்பிலான பணிகள் நடந்து, அதற்கு மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.30 கோடி நிதியும் வழங்கப்பட்டு விட்ட நிலையில், தமிழக அரசின் பங்களிப்பு நிதி வராததால் பணிகள் நிறுத்தப்பட்டன.

ஆட்சி மாற்றத்துக்குப் பின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அப்பணி மீண்டும் நடக்கவேயில்லை. இந்நிலையில், ஒருங்கிணைந்த பஸ் நிலையம், 'எல் அண்ட் டி' பை பாஸ் அருகே இடம் மாற்றப்படுவதாக கலெக்டர் சமீரன் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளும்கட்சிக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மனையிடங்களின் நில மதிப்பை அதிகப்படுத்தவே, இது இடம் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

முன்னாள் முதல்வர் பழனிசாமியும், இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். கோவையில் அரசு விழாவில் நேற்று பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து ஏதாவது அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், அறிவிக்கவில்லை. இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், இந்த இடத்தில் பஸ்போர்ட் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்த காரணம் வெளியாகியுள்ளது.

பஸ் போர்ட் திட்டத்துக்கு சரியான இடமா என்று வெள்ளலுாரில், தமிழக அரசு தேர்வு செய்த இடத்தை ஆய்வு செய்வதற்கு, 'டில்லி இன்டிகிரேடெட் மல்டி மாடல் டிரான்சிட் சிஸ்டம் லிமிடெட்' என்ற ஆலோசனை நிறுவனத்தை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், கடந்த, 2018ல் நியமித்துள்ளது. இந்நிறுவனம், இங்கு வந்து ஆய்வு செய்து அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அதில், 'குப்பைக்கிடங்கு அருகில் உள்ளது. கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அங்கு அமைக்கப்படவுள்ளது. சுகாதார ரீதியாக இந்த இடம் உகந்ததாக இல்லை. எனவே, மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளது. இந்த அறிக்கை பற்றி, அமைச்சகத்தின் செயலர் தலைமையில், 2018 டிச., 20 அன்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. பஸ்போர்ட்டுக்குத் தேர்வு செய்த இடத்துக்கு அணுகுசாலைகள் இல்லாதது குறித்தும் அப்போது கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அமைச்சகத்தின் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகம், இந்த இடத்தை நிராகரிக்க பரிந்துரைத்துள்ளது. அமைச்சகத்தின் தொழில்நுட்ப பொது மேலாளர் அசோக் குமார், தமிழக அரசுக்கு இதுகுறித்து தெரிவிக்குமாறு, அமைச்சகத்தின் போக்குவரத்துப் பிரிவு இயக்குனருக்கு, 2019 பிப்., 20ல் கடிதம் அனுப்பியுள்ளார். அவர், தமிழக அரசின் தலைமை செயலருக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு, மத்திய அரசு நிராகரித்த இடத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு ஏன் முடிவெடுத்தது, மத்திய அரசின் நிதியில் பஸ்போர்ட் அமைக்க இடத்தை தேர்வு செய்து தராமல், மாநில அரசின் நிதியை ஏன் செலவிட்டது போன்ற கேள்விகள்இப்போது எழுந்துள்ளன. இதையே இப்போது காரணமாகக் கூறியே, ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை கைவிடவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், மத்திய அரசே நிராகரித்த இடமென்று காரணம் கூறிவிட்டு, ஆளும்கட்சி நிறுவனத்துக்கு ஆதரவாக 'எல் அண்ட் டி' பை பாஸ் அருகில் இதை மாற்றுவதே சர்ச்சையாகியுள்ளது. அதற்குப் பதிலாக, வேறு இடத்தை தமிழக அரசு தேர்வு செய்யுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. இரண்டு கட்சிகளுமே, தங்களுடைய ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவே, இந்த இடங்களைத் தேர்வு செய்துள்ளன என்ற பேச்சும் இப்போது கிளம்பியுள்ளது.

பாரத்மாலா திட்டத்தில், கோவையில் பஸ் போர்ட் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்து விட்ட நிலையில், வெள்ளலுார் இடத்தைத்தான் மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் நிராகரித்துள்ளது. குப்பை நாற்றமில்லாத, அணுகுசாலைகள் இருக்கிற இடத்தை தேர்வு செய்யும்பட்சத்தில், அதே திட்டத்தில் கோவைக்கு மீண்டும் பஸ்போர்ட் அமைக்க மத்திய அரசு நிதியளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மத்திய அரசுடன்,மாநில அரசுக்கு இணக்கம் இல்லாத நிலையில் இது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்